பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / உட் சமயம்
வ.எண் பாடல்
1

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்கள் ஆறும் தன் தாள் இணை நாட
அமையம் குழல் கின்ற ஆதி பிரானே.

2

ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள
என்றது போல இரு முச் சமயமும்
நன்று இது தீது இது என்று உரையாளர்கள்
குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே.

3

சைவப் பெருமைத் தனி நாயகன் தன்னை
உய்ய உயிர்க் கின்ற ஒண் சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம் செய்
வையத் தலைவனை வந்து அடைந்து உய்மினே.

4

சிவன் அவன் வைத்தது ஓர் தெய்வ நெறியில்
பவன் அவன் வைத்த பழ வழி நாடி
இவன் அவன் என்பது அறிய வல்லார்கட்கு
அவன் அவன் அங்கு உளதாம் கடன் ஆமே.

5

ஆம் ஆறு உரைக்கும் அறு சமய ஆதிக்குப்
போம் ஆறு தான் இல்லை புண்ணியம் அல்லது அங்கு
ஆம் ஆம் வழி ஆக்கும் அவ் வேறு உயிர் கட்கும்
போம் ஆறு அவ் ஆதாரப் பூங் கொடியாளே.

6

அரன் நெறி ஆவது அறிந்தேனும் நானும்
சிர நெறி தேடித் திரிந்த அந்நாளும்
உர நெறி உள்ளக் கடல் கடந்து ஏறும்
தர நெறி நின்ற தனிச் சுடர் தானே.

7

தேர்ந்த அரனை அடைந்த சிவ நெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள் நெறி
போந்து புனைந்து புணர் நெறி ஆமே.

8

ஈருமனத்தை இரண்டு அற வீசுமின்
ஊரும் சகாரத்தை ஓதுமின் ஓதியே
வாரும் அரநெறி மன்னியே முன்னியத்
தூரும் சுடர் ஒளி தோன்றலும் ஆமே.

9

மினல் குறியாளனை வேதியர் வேதத்து
அனல் குறியாளனை ஆதிப் பிரான் தன்னை
நினைக் குறியாளனை ஞானக் கொழுந்தின்
நயக் குறி காணில் அரன் நெறி ஆமே.

10

ஆய்ந்து உணரார் களின் ஆன்மாச் சதுர் பல
ஆய்ந்து உணரா வகை நின்ற அரன் நெறி
பாய்ந்து உணர்வார் அரன் சேவடி கை தொழு
தேர்ந்து உணர் செய்வது ஓர் இன்பமும் ஆமே.

11

சைவ சமயத் தனிநாயகன் நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உளார்க்கு வகுத்து வைத்தானே.

12

இத்தவம் அத்தவம் என்று இரு பேர் இடும்
பித்தரைக் காணின் நகும் எங்கள் பேர் நந்தி
எத்தவம் ஆகில் என் எங்குப் பிறக்கில் என்
ஒத்து உணர்வார்க்கு ஒல்லையூர் புகல் ஆமே.

13

ஆமே பிரான் முகம் ஐந்தொடும் ஆர் உயிர்
ஆமே பிரானுக்கு அதோ முகம் ஆறு உள
தாமே பிரானுக்கும் தன் சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரர் இயல்பாமே.

14

ஆதிப் பிரான் உலகு ஏழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களும் ஆய் நிற்கும்
பேதிப்பு இலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக் கண் தெய்வமும் அந்தமும் ஆமே.

15

ஆய்ந்து அறிவார்கள் அமரர் வித்தியாதரர்
ஆய்ந்து அறியா வண்ணம் நின்ற அரன் நெறி
ஆய்ந்து அறிந்தேன் அவன் சேவடி கை தொழ
ஆய்ந்து அறிந்தேன் இம்மை அம்மை கண்டேனே.

16

அறிய ஒண்ணாத அவ் உடம்பின் பயனை
அறிய ஒண்ணாத அறு வகை ஆக்கி
அறிய ஒண்ணாத அறுவகைக் கோசத்து
அறிய ஒண்ணாதது ஓர் அண்டம் பதிந்தே