பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
இரு பதம் ஆவது இரவும் பகலும் உரு அது ஆவது உயிரும் உடலும் அருள் அது ஆவது அறமும் தவமும் பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே
காண்டற்கு அரியன் கருத்து இலன் நந்தியும் தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும் வேண்டிக் கிடந்து விளக்கு ஒளியான் நெஞ்சம் ஈண்டுக் கிடந்து அங்கு இருள் அறும் ஆமே.
குறிப்பினில் உள்ளே குவலயம் தோன்றும் வெறுப்பு இருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும் செறிப்பு உறு சிந்தையைச் சிக்கென நாடில் அறிப்பு உறு காட்சி அமரரும் ஆமே.
தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள் பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம் இறை ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் எனச் சார்ந்து அறிவான் பெரும் தன்மை வல்லானே.
தானே அறியும் வினைகள் அழிந்தபின் நானே அறிகிலன் நந்தி அறியும் கொல் ஊனே உருகி உணர்வை உணர்ந்த பின் தேனே அனைய நம் தேவர் பிரானே.
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை வான் அறிந்தார் அறியாது மயங்கினர் ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர் தான் அறியான் பின்னை யார் அறிவாரே.
அருள் எங்கும் ஆன அளவை அறியார் அருளை நுகர அமுது ஆனதும் தேரார் அருள் ஐங்கருமத்து அதி சூக்கம் உன்னார் அருள் எங்கும் கண்ணானது ஆர் அறிவாரே.
அறிவில் அணுக அறிவது நல்கிப் பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்டு அறிவு அது ஆக்கி அடி அருள் நல்கும் செறிவொடு நின்றார் சிவம் ஆயினாரே.
அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு அருளில் அழிந்து இளைப் பாறி மறைந்திட்டு அருளான ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே.
அருளால் அமுதப் பெருங் கடல் ஆட்டி அருளால் அடி புனைந்து ஆர்வமும் தந்திட்டு அருளான ஆனந்தத்து ஆர் அமுது ஊட்டி அருளால் என் நந்தி அகம் புகுந்தானே.
பாசத்தில் இட்டது அருள் அந்தப் பாசத்தின் நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தின் கூசற்ற முத்தி அருள் அந்தக் கூட்டத்தின் நேசத்துத் தோன்றா நிலை அருள் ஆமே.
பிறவா நெறி தந்த பேர் அருளாளன் மறவா அருள் தந்த மாதவன் நந்தி அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன் உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே.
அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு அகம் புகுந்து ஆனந்தம் ஆக்கிச் சிவம் ஆய் அகம் புகுந்தான் அந்தியான் அந்தி ஆமே.
ஆயும் அறிவோடு அறியாத மா மாயை ஆய கரணம் படைக்கும் ஐம் பூதமும் மாய பல இந்திரியம் அவற்றுடன் ஆய அருள் ஐந்து மா மருள் செய்கையே.
அருளே சகலமும் ஆய பௌதிகம் அருளே சரா சரம் ஆய அகிலம் இருளே வெளியே எனும் எங்கும் ஈசன் அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே.
சிவமொடு சத்தி திகழ் நாதம் விந்து தவம் ஆன ஐம் முகன் ஈசன் அரனும் பவம் உறு மாலும் பதுமத்தோன் ஈறா நவம் அவை ஆகி நடிப்பவன் தானே.
அருள் கண் இலாதார்க்கு அரும் பொருள் தோன்றா அருள் கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே இருள் கண்ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றாத் தெருள் கண்ணி னோர்க்கு எங்கும் சீர் ஒளி ஆமே.
தானே படைத்திடும் தானே அளித்திடும் தானே துடைத்திடும் தானே மறைந்திடும் தானே இவை செய்து தான் முத்தி தந்திடும் தானே வியாபித்து தலைவனும் ஆமே.
தலை ஆன நான்கும் தனது அருவாகும் அலையா வரு உருவாகும் சதா சிவம் நிலையான கீழ் நான்கு நீடு உரு ஆகும் துலையா இவை முற்றும் ஆய் அல்லது ஒன்றே.
ஒன்று அதுவாலே உலப்பு இலி தான் ஆகி நின்றது தான்போல் உயிர்க்கு உயிராய் நிலை துன்றி அவை அல்ல ஆகும் துணை என்ன நின்றது தான் விளையாட்டு என் உள் நேயமே.
நேயத்தே நின்றிடும் நின் மலன்சத்தியோடு ஆயக் குடிலையுள் நாதம் அடைந்து இட்டுப் போயக் கலை பல ஆகப் புணர்ந்திட்டு வீயத் தகா விந்து ஆக விளையுமே.
விளையும் பர விந்து தானே வியாபி விளையும் தனி மாயை மிக்க மா மாயை கிளை ஒன்று தேவர் கிளர் மனு வேதம் அளவு ஒன்று இலா அண்ட கோடிகள் ஆமே.