பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தன்னை அறியத் தனக்கு ஒரு கேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே.
அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழச் சிங்கா சனத்தே சிவன் இருந்தான் என்று சங்கார் வளையும் சிலம்பும் சரேல் எனப் பொங்கார் குழலியும் போற்றி என்றாளே.
அறிவு வடிவு என்று அறியாத என்னை அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே அறிவு வடிவு என்று அறிந்து இருந்தேனே.
அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்று இட்டு அறைகின்றன மறை ஈறுகள் தாமே.
மன்னி நின்றார் இடை வந்த அருள் மாயத்து முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியைப் பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே.
அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்ம்மின் அறிவு அறிவு ஆக அறியும் இவ் வண்ணம் அறிவு அறிவு ஆக அணிமா ஆதி சித்தி அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே.
அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம் அறிவு அறியாமை யாரும் அறியார் அறிவு அறியாமை கடந்து அறிவானால் அறிவு அறியாமை அழகிய வாறே.
அறிவு அறியாமையை நீவி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போது அறிவாய் அவற்றின் உள் தான் ஆய் அறிவின் செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே.
அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது அறிவுடையார் நெஞ்சு அரும் தவம் ஆவது அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும் அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே.
மாயனும் ஆகி மலரோன் இறையும் ஆய்க் காய நல் நாட்டுக் கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீங் கரும்பு ஆய அமுதாகி நின்று அண்ணிக் கின்றானே.
என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கை விடாது என்னை இட்டு என்னை உசாவு கின்றானே.
மாய விளக்கு அது நின்று மறைந்திடும் தூய விளக்கு அது நின்று சுடர் விடும் காய விளக்கு அது நின்று கனன்றிடும் சேய விளக்கினைத் தேடு கின்றேனே.
தேடு கின்றேன் திசை எட்டோடு இரண்டையும் நாடு கின்றேன் நலமே உடையான் அடி பாடுகின்றேன் பரமே துணை ஆம் எனக் கூடுகின்றேன் குறையா மனத்தாலே.
முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர் பின்னைப் பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத் தன்னைத் தெரிந்து தன் பண்டைத் தலைவன் தாள் மன்னிச் சிவம் ஆக வாரா பிறப்பே.