பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / உபசாந்தம்
வ.எண் பாடல்
1

காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள்
காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி
காரிய காரண வாதனைப் பற்று அறப்
பாரணவும் உப சாந்தப் பரிசு இதே.

2

அன்ன துரியமே ஆத்தும சுத்தியும்
முன்னிய சாக்கிரா தீதத்து உறு புரி
மன்னு பரங்காட்சி ஆவது உடன் உற்றுத்
தன்னின் வியாத்தி தனின் உப சாந்தமே

3

ஆறு ஆறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு
பேறு ஆன தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி
கூறாத சாக்கிரா தீதம் குருபரன்
பேறு ஆம் வியாத்தம் பிறழ் உப சாந்தமே.

4

வாய்ந்த உப சாந்த வாதனை உள்ளப் போய்
ஏய்ந்த சிவம் ஆதலின் சிவ ஆனந்தத்துத்
தோய்ந்து அறல் மோனச் சுக அனுபவத் தோடே
ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈர் ஐந்துமே.

5

பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த்
திரையின் இன்றாகிய தெண்புனல் போல உற்று
உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன்
கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே.

6

பிறையுள் கிடந்த முயலை எறிவான்
அறை மணி வாள் கொண்டவர் தமைப் போலக்
கறை மணி கண்டனைக் காண்குற மாட்டார்
நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே.