பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / பத்தி உடைமை
வ.எண் பாடல்
1

முத்தி செய் ஞானமும் கேள்வியும் ஆய் நிற்கும்
அத்தனை மாயா அமரர் பிரான் தன்னைச்
சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற சோதியைப்
பத்தர் பரசும் பசுபதி தான் என்றே.

2

அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவன் அடி கூட
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே.

3

நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும்
ஆரிக் கடன் நந்தியாம் அறிபவர்
பாரில் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி ஆகி நின்றானே.

4

ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று
அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்லப்
பத்தர் தம் பத்தியில் பால் படில் அல்லது
முத்தினை யார் சொல்ல முந்து கின்றாரே.

5

ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல்
நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை
வான் கன்றுக்கு அப்பால் ஆய் நின்ற மறைப்பொருள்
ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே.

6

பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான்
முத்தத்தும் தன் பணி இல்லை முறைமை யால்
அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால்
பத்தி பட்டோர்க்குப் பணி ஒன்றும் இல்லையே.

7

பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆகக்
குறவம் சிலம்பக் குளிர் வரை ஏறி
நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால்
இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே.

8

உறு துணை நந்தியை உம்பர் பிரானைப்
பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்மின்
செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து
உறு துணை ஆய் அங்கி ஆகி நின்றானே.

9

வானவர் தம்மை வலிசெய்து இருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவனைக்
கானவன் என்றும் கருவரையான் என்றும்
ஊனதன் உள் நினைந்து ஒன்று பட்டாரே.

10

நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த
தலைவனை நாடித் தயங்கும் என் உள்ளம்
மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும்
உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே.