பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பரம குரவன் பரம் எங்கும் ஆகித் திரம் உற எங்கணும் சேர்ந்து ஒழிவு அற்று நிரவு சொரூபத்து உள் நீடும் சொரூபம் அரிய துரியத்து அணைந்து நின்றானே.
குலைக்கின்ற நீரில் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாச நிலத்து இடை வான் இடை நீண்டு அகன்றானை வரைத்து வலம் செயும் மாறு அறியேனே.
அங்கு நின்றான் அயன் மால் முதல் தேவர்கள் எங்கு நின்றாரும் இறைவன் என்று ஏத்துவர் தங்கி நின்றான் தனி நாயகன் எம் இறை பொங்கி நின்றான் புவனா பதி தானே.
சமையச் சுவடும் தனை அறியாமல் கமை அற்ற காமம் ஆதி காரணம் எட்டும் திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர் அமரர்க்கு அதிபதி ஆகி நிற்பாரே.
மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல் உரு வாய் அது வேறு ஆம் அதுபோல் அணுப் பரன் சேய சிவமுத் துரியத்துச் சீர் பெற ஏயும் நெறி என்று இறை நூல் இயம்புமே.
உருவு அன்றியே நின்று உருவம் புணர்க்கும் கரு அன்றியே நின்று தான் கரு ஆகும் அரு அன்றியே நின்ற மாயப் பிரானைக் குரு அன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே.
உருவ நினைப்பவர்க்கு உள் உறும் சோதி உருவ நினைப்பவர் ஊழியும் காண்பர் உருவ நினைப்பவர் உம்பரும் ஆவர் உருவ நினைப்பவர் உலகத்தில் யாரே.
பரஞ்சோதி ஆகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி எனுள் படிந்ததன் பின்னைப் பரஞ்சோதி உண்ணான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.
சொரூபம் உருவம் குணம் தொல் விழுங்கி அரியன உற்பலம் ஆம் ஆறு போல மருவிய சத்தி ஆதி நான்கு மதித்த சொரூபக் குரவன் சுகோதயம் தானே.
உரை அற்ற ஆனந்த மோன சொரூபத்தன் கரை அற்ற சத்தி ஆதி காணில் அகார மரு உற்று உகார மகாரம் அது ஆக உரை அற்ற தாரத்தில் உள் ஒளி ஆமே.
தலை நின்ற தாழ்வரை மீது தவம் செய்து முலை நின்ற மாது அறி மூர்த்தியை யானும் புலை நின்ற பொல்லாப் பிறவி கடந்து கலை நின்ற கள்வனில் கண்டு கொண்டேனே.
ஆம் ஆறு அறிந்தேன் அகத்தின் அரும் பொருள் போம் ஆறு அறிந்தேன் புகும் ஆறும் ஈது என்றே ஏமாப்பது இல்லை இனி ஓர் இடம் இல்லை நாம் ஆம் முதல்வனும் நான் எனல் ஆமே.