பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / ஆதனம்
வ.எண் பாடல்
1

பங்கயம் ஆதி பரந்த பல் ஆதனம்
அங்கு உளவாம் இரு நாலும் அவற்றின் உள்
செங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத்
தங்க இருப்பத் தலைவனும் ஆமே.

2

ஓர் அணை அப்பதம் ஊருவின் மேல் ஏறி இட்டு
ஆர வலித்து அதன்மேல் வைத்து அழகுறச்
சீர் திகழ் கைகள் அதனைத் தன் மேல் வைக்கப்
பார் திகழ் பத்மாசனம் எனல் ஆமே.

3

துரிசு இவ் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
அரிய முழந் தாளில் அம் கையை நீட்டி
உருசியொடும் உடல் செவ்வே இருத்திப்
பரிசு பெறும் அது பத்திர ஆசனமே.

4

ஒக்க அடி இணை ஊருவில் ஏறிட்டு
முக்கி உடலை முழங் கை தனில் ஏற்றித்
தொக்க அறிந்து துளங்காது இருந்திடல்
குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.

5

பாத முழந்தாளில் பாணிகளை நீட்டி
ஆதர வோடும் வாய் அங்காந்து அழகு உறக்
கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச்
சீர் திகழ் சிங்காதனம் எனச் செப்புமே.

6

பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓர் ஏழு
உத்தமம் ஆம் முது ஆசனம் எட்டு எட்டுப்
பத்தொடு நூறு பல ஆசனமே.