பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / அட்டாங்க யோகப் பேறு
வ.எண் பாடல்
1

போது உகந்து ஏறும் புரிசடையான் அடி
யாது உகந்தார் அமரா பதிக்கே செல்வர்
ஏது உகந்தான் இவன் என்று அருள் செய்திடும்
மாது உகந்து ஆடிடும் ஆல் விடையோனே.

2

பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ்
கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு
முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.

3

வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த்
திருந்து அமராபதிச் செல்வன் இவன் எனத்
தரும் தண் முழவம் குழலும் இயம்ப
இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே.

4

செம் பொன் சிவகதி சென்று எய்தும் காலத்துக்
கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள
எம் பொன் தலைவன் இவனாம் எனச் சொல்ல
இன்பக் கலவி இருக்கலும் ஆமே.

5

சேர் உறு காலத்து இசை நின்ற தேவர்கள்
ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன
ஏர் உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
கார் உரு கண்டனை மெய் கண்டவாறே.

6

நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும்
சொல் வழியாளர் சுருங்காப் பெரும் கொடை
இல்வழி யாளர் இமையவர் எண்திசைப்
பல்வழி எய்தினும் பார்வழி ஆகுமே.

7

தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும்
வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும்
தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும்
தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே.

8

காரியம் ஆன உபாதியைத் தான் கடந்து
ஆரிய காரணம் ஏழும் தன்பால் உற
ஆரிய காரணம் ஆய தவத்து இடைத்
தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே.