பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இளம்பெருமான் அடிகள் / சிவபெருமான் திருமும்மணிக்கோவை
வ.எண் பாடல்
1

முதல்வன் வகுத்த மதலை மாடத்து
இடவரை ஊன்றிய கடவுட் பாண்டிற்
பள்ளிச் செம்புயல் உள்விழு துறீஇப்
புத்தேள் நிவந்த முத்த மாச்சுடர்
5 எறிவளி எடுப்பினும் சிறுநடுக் குறாநின்
அடிநிழல் அளியவோ வைத்த முடிமிசை
இலங்குவளைத் தனிப்போது விரித்த
அலங்குகதிர் ஒலியல்நீ அணிந்ததென் மாறே.

2

மாறு தடுத்த மணிக்கங்கை திங்களின்
கீறு தடுப்பக் கிடக்குமே? - நீறடுத்த
செந்தாழ் வரையின் திரள்போல் திருமேனி
எந்தாய்நின் சென்னி இடை.

3

இடைதரில் யாம்ஒன் றுணர்த்துவது உண்டிமை யோர்சிமையத்(து)
அடைதரு மூரிமந் தாரம் விராய்நதி வெண்ணிலவின்
தொடைதரு துண்டங் கிடக்கினும் தொண்டர் ஒதுக்கியிட்ட
புடைதரு புல்லெருக் குஞ்செல்லு மோநின் புரிசடைக்கே

4

சடையே,
நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே!
மிடறே,
நஞ்சகம் துவன்றி, அமிர்துபிலிற் றும்மே!
வடிவே,
மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே!
அடியே,
மடங்கல்மதம் சீறி, மலர்பழிக் கும்மே!
அஃதான்று,
இனையஎன் றறிகிலம் யாமே; முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.

5

வேலை முகடும் விசும்பகடும் கைகலந்த
காலைநீர் எங்கே கரந்தனையால் - மாலைப்
பிறைக்கீறா கண்ணுதலா பெண்பாகா ஐயோ
இறைக்கூறாய் எங்கட் கிது.

6

இதுநீர் ஒழிமின் இடைதந் துமையிமை யத்தரிசி
புதுநீர் மணத்தும் புலியத ளேயுடை பொங்குகங்கை
முதுநீர் கொழித்த இளமணல் முன்றில்மென் தோட்டதிங்கள்
செதுநீர் ததும்பத் திவளஞ்செய் செஞ்சடைத் தீவண்ணரே.

7

வண்ணம்,
அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமின் விலகிப் பகல்செகுக் கும்மே,
என்னை?
பழமுடைச் சிறுகலத்(து) இடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே!
அஃதான்று,
முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்(து)
ஏமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.

8

உடைதலையின் கோவை ஒருவடமோ கொங்கை
புடைமலிந்த வெள்ளெருக்கம் போதோ - சடைமுடிமேல்
முன்னநாள் பூத்த முகிழ்நிலவோ முக்கணா
இன்னநாள் கண்ட திவள்.

9

இவள்அப் பனிமால் இமையத் தணங்குகற் றைச்சடைமேல்
அவள்அப்புத் தேளிர் உலகிற்(கு) அரசி அதுகொண்டென்னை
எவளுக்கு நீநல்ல(து) யாரைமுன் எயிதிற்(று)எற் றேயிதுகாண்
தவளப் பொடிச்செக்கர் மேனிமுக் கண்ணுடைச் சங்கரனே.

10

கரதலம் நுழைத்த மரகதக் கபாடத்து
அயில்வழங்கு குடுமிக் கயிலை நாடநின்
அணங்குதுயில் எடுப்பிற் பிணங்குநிலாப் பிணையல்
யாமே கண்டதும் இலமே தாமா
மூவா எஃகமும் முரணும்
ஓவாது பயிற்றும் உலகம்மால் உளதே.

11

உளரொளிய கங்கை ஒலிதிரைகள் மோத
வளரொளி தேய்ந்து உள்வளைந்த(து) ஒக்கும் - கிளரொளிய
பேதைக் கருங்கட் பிணாவின் மணாளனார்
கோதைப் பிறையின் கொழுந்து.

12

கொழுந்திரள் தெண்ணில வஞ்சிநின் கூரிருள் வார்பளிங்கின்
செழுந்திரள் குன்றகஞ் சென்றடைந் தால்ஒக்குந் தெவ்வர்நெஞ்சத்(து)
அழுந்திரள் கண்டத் தவளப் பொடிச்செக்கர் மேனிநின்றோர்
எழுந்திரள் சோதிப் பிழம்பும்என் உள்ளத்(து) இடங்கொண்டவே.

13

கொண்டல் காரெயிற்றுச் செம்மருப்(பு) இறாலின்
புண்படு சிமையத்துப் புலவுநாறு குடுமி
வரையோன் மருக புனலாள் கொழுந
இளையோன் தாதை முதுகாட்டுப் பொருநநின்
நீறாடு பொலங்கழல் பரவ
வேறாங்கு கவர்க்குமோ வீடுதரு நெறியே.

14

நெறிவிரவு கொன்றை நெடும்படற்கீழ்க் கங்கை
எறிதிரைகள் ஈர்த்தெற்ற ஏறிப் - பொறிபிதிர
ஈற்றராக் கண்படுக்கும் இண்டைச் சடைச்செங்கண்
ஏற்றரால் தீரும் இடம்.

15

இடர்தரு தீவினைக்(கு) எள்கிநை வார்க்குநின் ஈரடியின்
புடைதரு தாமரைப் போதுகொ லாம்சரண் போழருவிப்
படர்தரு கொம்பைப் பவளவண் ணாபரு மாதைமுயங்(கு)
அடைதரு செஞ்சுடர்க் கற்றையொக் குஞ்சடை அந்தணனே.

16

அந்த ணாளர் செந்தொடை ஒழுக்கமும்
அடலோர் பயிற்றும்நின் சுடர்மொழி ஆண்மையும்
அவுணர் நன்னாட் டிறைவன் ஆகிக்
குறுநெடுந் தானை பரப்பித் தறுகண்
மால்விடை அடரத் தாள்நிமிர்ந் துக்க
காய்சின அரவுநாண் பற்றி நீயோர்
நெடுவரை நெளிய வாங்கிச்
சுடுகணை எரிநிமிர்த்துத் துரந்த ஞான்றே.

17

ஞான்ற புனமாலை தோளலைப்ப நாண்மதியம்
ஈன்ற நிலவோடும் இவ்வருவான் - மூன்றியங்கு
மூதூர் வியன்மாடம் முன்னொருகாலம் துன்னருந்தீ
மீதூரக் கண்சிவந்த வேந்து.

18

வேந்துக்க மாக்கடற் சூரன்முன் னாள்பட வென்றிகொண்ட
சேந்தற்குத் தாதையிவ் வையம் அளந்ததெய் வத்திகிரி
ஏந்தற்று மைத்துனத் தோழனின் தேன்மொழி வள்ளியென்னும்
கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம் மால்விடைக் கொற்றவனே.

19

கொற்றத் துப்பின் பொற்றை ஈன்ற
சுணங்கையஞ் செல்வத் தணங்குதரு முதுகாட்டுப்
பேய்முதிர் ஆயத்துப் பிணவின் கொழுந!நின்
ஏர்கழல் கவைஇ இலங்கிதழ்த் தாமம்
தவழ்தரு புனல்தலைப் படுநர்
அவல மாக்கடல் அழுந்தலோ இலரே.

20

இலர்கொலாம் என்றிளைஞர் ஏசப் பலிக்கென்(று)
உலகெலாஞ் சென்றழல்வ ரேனும் - மலர்குலாம்
திங்கட் குறுந்தெரியல் தேவர்க்காட் செய்வதே
எங்கட் குறும்;தெரியின் ஈண்டு.

21

ஈண்டுமுற் றத்தொற்றை மால்விடை ஏறியை அம்முனைநாள்
வேண்டிமுற் றத்திரிந் தெங்கும் பெறாது வெறுங்கைவந்தார்
பூண்டவொற் றைச்செங்கண் ஆரமும் கற்றைச் சடைப்புனலும்
நீண்டஒற் றைப்பிறைக் கீளும்எப் போதுமென் நெஞ்சத்தவே

22

நெஞ்சிற் கொண்ட வஞ்சமோ உடைத்தே
மடவோர் விரும்புநின் விளையாட் டியல்போ?
மருள்புரி கொள்கைநின் தெருளா மையோ?
யாதா கியதோ? எந்தை நீதியென்(று)
உடைதலை நெடுநிலா வெறியல்
கடைதலென் றருளிச் சூடிய பொருளே.

23

பொருளாக யானிரந்தால் புல்லெருக்கின் போதும்
அருளான்மற் றல்லாதார் வேண்டின் - தெருளாத
பான்மறா மான்மறிக்கைப் பைங்கண் பகட்டுரியான்
தான்மறான் பைங்கொன்றைத் தார்.

24

தாரிளங் கொன்றைநல் ஏறு கடாவித் தலைமைமிக்க
ஏரிள மென்முலைப் பொன்மலை யாட்டிற்கெற் றேயிவனோர்
பேரிளங் கொங்கைப் பிணாவொடுங் கூடிப் பிறைக்கொழுந்தின்
ஓரிளந் துண்டஞ் சுமந்தையம் வேண்டி உழிதருமே.

25

உழிதரல் மடிந்து கழுதுகண் படுக்கும்
இடருறு முதுகாட்டுச் சீரியல் பெரும
புகர்முகத் துளைக்கை உரவோன் தாதை
நெடியோன் பாகநின்
சுடர்மொழி ஆண்மை பயிற்று நாவலர்க்(கு)
இடர்தரு தீவினை கெடுத்தலோ எளிதே.

26

எளியமென் றெள்கி இகழாது நாளும்
அளியம்ஆட் செய்தாலும் ஐயோ - தெளிவரிய
வள்கயிலை நீள்பொருப்ப வான்தோய் மதிச்சடையாய்
கொள்கயிலை எம்பாற் குறை.

27

குறையாப் பலியிவை கொள்கவென் கோல்வளை யுங்கலையும்
திறையாக்கொண் டாயினிச் செய்வதென் தெய்வக்கங் கைப்புனலில்
பொறையாய் ஒருகடல் நஞ்சுண்ட கண்டா பொடியணிந்த
இறைவா இடுபிணக் காடசெம் மேனியெம் வேதியனே.

28

வேதியர் பெரும விண்ணோர் தலைவ
ஆதி நான்முகத்(து) அண்ட வாண
செக்கர் நான்மறைப் புத்தேள் நாட
காய்சின மழவிடைப் பாகநின்
மூவிலை நெடுவேல் பாடுதும்
நாவலம் பெருமை நல்குவோய் எனவே.

29

எனவே உலகெலாம் என்றிளைஞர் ஏசு
நனவே பலிதிரிதி நாளும் - சினவேங்கைக்
கார்க்கயிலை நாட களிற்றீர் உரியலாற்
போர்க்கையிலை பேசல்நீ பொய்.

30

பொய்நீர் உரைசெய்தீர் பொய்யோம் பலியெனப் போனபின்னை
இந்நீள் கடைக்கென்று வந்தறி யீரினிச் செய்வதென்னே
செந்நீர் வளர்சடைத் திங்கட் பிளவொடு கங்கைவைத்த
முந்நீர்ப் பவளத் திரட்செக்கர் ஒக்கும் முதலவேன.