பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

தடுமாறும் நெறி அதனைத் தவம் என்று தம் உடலை
அடுமாறு செய்து ஒழுகும் அமண் வலையில் அகப்பட்டு
விடுமாறு தமிழ் விரகர் வினை மாறும் கழல் அடைந்த
நெடுமாறனார் பெருமை உலகு ஏழும் நிகழ்ந்ததால்.

2

அந்நாளில் ஆளுடைய பிள்ளையார் அருளாலே
தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் உய்த்து அறம் அளித்துச்
சொல்நாம நெறிபோற்றிச் சுரர் நகர்க்கோன் தனைக் கொண்ட
பொன் ஆரம் அணி மார்பில் புரவலனார் பொலி கின்றார்.

3

ஆய அரசு அளிப்பார் பால் அமர் வேண்டி வந்து ஏற்ற
சேய புலத் தெவ்வர் எதிர் நெல்வேலிச் செருக் களத்துப்
பாய படைக் கடல் முடுகும் பரிமாவின் பெரு வெள்ளம்
காயும் மதக் களிற்றின் நிரை பரப்பி அமர் கடக்கின்றார்.

4

எடுத்து உடன்ற முனைஞாட்பின் இருபடையில் பொரு படைஞர்
படுத்த நெடும் கரித்துணியும் பாய் மாவின் அறு குறையும்
அடுத்து அமர் செய் வயவர் கரும் தலைய மலையும் அலை செந்நீர்
மடுத்த கடல் மீளவும் தாம் வடிவேல் வாங்கிடப் பெருக.

5

வயப்பரியின் களிப்பு ஒலியும் மறவர் படைக்கல ஒலியும்
கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும்
வியக்கும் உகக் கடை நாளின் மேக முழக்கு என மீளச்
சயத்தொடர் வல்லியும் இன்று தாம் விடுக்கும் படி தயங்க.

6

தீ உமிழும் படை வழங்கும் செருக்களத்தும் உருக்கும் உடல்
தோயும் நெடும் குறுதி மடுக் குளித்து நிணம் துய்த்து ஆடிப்
போய பருவம் பணிகொள் பூதங்களே அன்றிப்
பேயும் அரும் பணி செய்ய உணவு அளித்தது எனப் பிறங்க.

7

இனைய கடும் சமர் விளைய இகல் உழந்த பறந்தலையில்
பனை நெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குஉடைந்து
முனை அழிந்த வடபுலத்து முதல் மன்னர் படைசரியப்
புனையும் நறும் தொடை வாகை பூழியர் வேம்புடன் புனைந்து.

8

வளவர் பிரான் திருமகளார் மங்கையருக்கரசியார்
களபம்அணி முலை திளைக்கும் தடமார்பில் கவுரியனார்
இளவள வெண் பிறை அணிந்தார்க்கு ஏற்ற திருத்தொண்டு எல்லாம்
அளவு இல் புகழ் பெற விளக்கி அருள் பெருக அரசு அளித்தார்.

9

திரை செய் கடல் உலகின் கண் திருநீற்றின் நெறி விளங்க
உரைசெய் பெரும்புகழ் விளக்கி ஓங்கு நெடு மாறனார்
அரசு உரிமை நெடும் காலம் அளித்து இறைவர் அருளாலே
பரசு பெரும் சிவலோகத்தில் இன் புற்று பணிந்து இருந்தார்.

10

பொன் மதில் சூழ் புகலி காவலர் அடிக்கீழ்ப் புனிதர் ஆம்
தென்மதுரை மாறனார் செங்கமலக் கழல் வணங்கிப்
பன்மணிகள் திரை ஓதம் பரப்பு நெடும் கடல் படப்பைத்
தொல் மயிலை வாயிலார் திருத்தொண்டின் நிலை தொழுவாம்.