பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

தில்லைவாழ் அந்தணர் புராணம்
வ.எண் பாடல்
001

ஆதியாய் நடுவும் ஆகி அளவு இலா அளவும் ஆகிச்
சோதியாய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி! போற்றி!

002

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி,
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று,
பொற்பு உடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி! போற்றி்!

003

போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்;
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார்; பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார்; பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்.

004

பொங்கிய திருவில் நீடும் பொற்பு உடைப் பணிகள் ஏந்தி,
மங்கலத் தொழில்கள் செய்து, மறைகளால் துதித்து, மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணித் தலை நின்று உய்த்தே,
அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார்.

005

வரு முறை எரி மூன்று ஓம்பி, மன் உயிர் அருளால் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டு, தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று, வல்லார்;
திரு நடம் புரிவார்க்கு ஆள் ஆம் திருவினால் சிறந்த நீரார்.

006

மறு இலா மரபின் வந்து மாறு இலா ஒழுக்கம் பூண்டார்;
அறு தொழில் ஆட்சியாலே அருங் கலி நீக்கி உள்ளார்;
உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார்;
பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார்.

007

ஞானமே முதலாம் ‘நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்;
தானமும் தவமும் வல்லார்; தகுதியின் பகுதி சார்ந்தார்;
ஊனம் மேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்.

008

செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார்; இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்.

009

இன்று இவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ?
தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றார்.

010

அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ!
நிகழ் திரு நீல கண்டக் குயவனார், நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம்.