பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஏர் ஆர் இளம் கிளியே! எங்கள் பெருந்துறைக் கோன் சீர் ஆர் திரு நாமம் தேர்ந்து உரையாய் ஆரூரன், செம் பெருமான், வெள் மலரான், பால் கடலான், செப்புவ போல், எம் பெருமான், தேவர் பிரான், என்று.
ஏதம் இலா இன் சொல் மரகதமே! ஏழ் பொழிற்கும் நாதன், நமை ஆளுடையான், நாடு உரையாய் காதலர்க்கு அன்பு ஆண்டு, மீளா அருள் புரிவான் நாடு, என்றும், தென் பாண்டி நாடே, தெளி.
தாது ஆடு பூஞ்சோலைத் தத்தாய்! நமை ஆளும் மாது ஆடும் பாகத்தன் வாழ் பதி என்? கோதாட்டிப் பத்தர் எல்லாம் பார்மேல், சிவபுரம்போல், கொண்டாடும் உத்தரகோசமங்கை ஊர்.
செய்ய வாய்ப் பைம் சிறகின் செல்வீ! நம் சிந்தை சேர் ஐயன், பெருந்துறையான், ஆறு உரையாய் தையலாய்! வான் வந்த சிந்தை மலம் கழுவ வந்து, இழியும் ஆனந்தம் காண், உடையான் ஆறு.
கிஞ்சுக வாய் அம் சுகமே! கேடு இல் பெருந்துறைக் கோன் மஞ்சு மருவு மலை பகராய் நெஞ்சத்து இருள் அகல வாள் வீசி, இன்பு அமரும் முத்தி அருளும் மலை என்பது காண், ஆய்ந்து.
இப் பாடே வந்து, இயம்பு; கூடு புகல் என்? கிளியே! ஒப்பு ஆடாச் சீர் உடையான் ஊர்வது என்னே? எப்போதும் தேன் புரையும் சிந்தையர் ஆய், தெய்வப் பண் ஏத்து இசைப்ப, வான் புரவி ஊரும், மகிழ்ந்து.
கோல் தேன் மொழிக் கிள்ளாய்! கோது இல் பெருந்துறைக் கோன், மாற்றாரை வெல்லும் படை பகராய் ஏற்றார் அழுக்கு அடையா நெஞ்சு உருக, மும் மலங்கள் பாயும் கழுக்கடை காண், கைக்கொள் படை.
இன் பால் மொழிக் கிள்ளாய்! எங்கள் பெருந்துறைக் கோன் முன்பால் முழங்கும் முரசு இயம்பாய் அன்பால், பிறவிப் பகை கலங்க, பேரின்பத்து ஓங்கும், பரு மிக்க நாதப் பறை.
ஆய மொழிக் கிள்ளாய்! அள்ளூறும் அன்பர்பால் மேய பெருந்துறையான் மெய்த் தார் என்? தீய வினை நாளும் அணுகாவண்ணம் நாயேனை ஆளுடையான், தாளி அறுகு ஆம், உவந்த தார்.
சோலைப் பசும் கிளியே! தூ நீர்ப் பெருந்துறைக் கோன் கோலம் பொலியும் கொடி கூறாய் சாலவும் ஏதிலார் துண் என்ன, மேல் விளங்கி, ஏர் காட்டும் கோது இலா ஏறு ஆம், கொடி.