பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆசைப் பத்து
வ.எண் பாடல்
1

கருடக் கொடியோன் காணமாட்டாக் கழல் சேவடி என்னும்
பொருளைத் தந்து, இங்கு, என்னை ஆண்ட பொல்லா மணியே! ஓ!
இருளைத் துரந்திட்டு, இங்கே வா என்று, அங்கே, கூவும்
அருளைப் பெறுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

2

மொய்ப்பால் நரம்பு கயிறு ஆக, மூளை, என்பு, தோல், போர்த்த
குப்பாயம் புக்கு, இருக்ககில்லேன்; கூவிக்கொள்ளாய்; கோவே! ஓ!
எப்பாலவர்க்கும் அப்பால் ஆம் என் ஆர் அமுதே! ஓ!
அப்பா! காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

3

சீ வார்ந்து, ஈ மொய்த்து, அழுக்கொடு திரியும் சிறு குடில் இது சிதையக்
கூவாய்; கோவே! கூத்தா! காத்து ஆட்கொள்ளும் குரு மணியே!
தேவா! தேவர்க்கு அரியானே! சிவனே! சிறிது என் முகம் நோக்கி,
ஆ! ஆ! என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

4

மிடைந்து எலும்பு, ஊத்தை மிக்கு, அழுக்கு ஊறல், வீறு இலி, நடைக் கூடம்
தொடர்ந்து எனை நலைய, துயர் உறுகின்றேன்; சோத்தம்! எம் பெருமானே!
உடைந்து, நைந்து, உருகி, உள் ஒளி நோக்கி, உன் திரு மலர்ப் பாதம்
அடைந்து நின்றிடுவான், ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

5

அளி புண் அகத்து, புறம் தோல் மூடி, அடியேன் உடை யாக்கை,
புளியம்பழம் ஒத்து இருந்தேன்; இருந்தும், விடையாய்! பொடி ஆடீ!
எளிவந்து, என்னை ஆண்டுகொண்ட என் ஆர் அமுதே! ஓ!
அளியேன் என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

6

எய்த்தேன் நாயேன்; இனி இங்கு இருக்ககில்லேன்; இவ் வாழ்க்கை
வைத்தாய்; வாங்காய்; வானோர் அறியா மலர்ச் சேவடியானே!
முத்தா! உன் தன் முக ஒளி நோக்கி, முறுவல் நகை காண,
அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

7

பாரோர், விண்ணோர், பரவி ஏத்தும் பரனே! பரஞ்சோதி!
வாராய்; வாரா உலகம் தந்து, வந்து ஆட்கொள்வானே!
பேர் ஆயிரமும் பரவித் திரிந்து, எம் பெருமான் என ஏத்த,
ஆரா அமுதே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

8

கையால் தொழுது. உன் கழல் சேவடிகள் கழுமத் தழுவிக்கொண்டு,
எய்யாது என் தன் தலை மேல் வைத்து, எம் பெருமான்!, பெருமான்! என்று,
ஐயா! என் தன் வாயால் அரற்றி, அழல் சேர் மெழுகு ஒப்ப,
ஐயாற்று அரசே! ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

9

செடி ஆர் ஆக்கைத் திறம் அற வீசி, சிவபுர நகர் புக்கு,
கடி ஆர் சோதி கண்டுகொண்டு, என் கண் இணை களி கூர,
படி தான் இல்லாப் பரம்பரனே! உன் பழ அடியார் கூட்டம்,
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!

10

வெம், சேல் அனைய கண்ணார் தம் வெகுளி வலையில் அகப்பட்டு,
நைஞ்சேன், நாயேன்; ஞானச் சுடரே! நான் ஓர் துணை காணேன்;
பஞ்சு ஏர் அடியாள் பாகத்து ஒருவா! பவளத் திருவாயால்,
அஞ்சேல் என்ன, ஆசைப்பட்டேன் கண்டாய்; அம்மானே!