பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

சென்னிப் பத்து
வ.எண் பாடல்
1

தேவ தேவன், மெய்ச் சேவகன், தென் பெருந்துறை நாயகன்,
மூவராலும் அறிஒணா, முதல் ஆய, ஆனந்த மூர்த்தியான்,
யாவர் ஆயினும், அன்பர் அன்றி, அறிஒணா மலர்ச் சோதியான்,
தூய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, சுடருமே!

2

அட்ட மூர்த்தி, அழகன், இன் அமுது ஆய ஆனந்த வெள்ளத்தான்,
சிட்டன், மெய்ச் சிவலோக நாயகன், தென் பெருந்துறைச் சேவகன்,
மட்டு வார் குழல் மங்கையாளை ஒர் பாகம் வைத்த அழகன் தன
வட்ட மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

3

நங்கைமீர்! எனை நோக்குமின்; நங்கள் நாதன், நம் பணி கொண்டவன்,
தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன், நாயகன்,
மங்கைமார் கையில் வளையும் கொண்டு, எம் உயிரும் கொண்டு, எம் பணி கொள்வான்
பொங்கு மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, பொலியுமே!

4

பத்தர் சூழ, பரா பரன் பாரில் வந்து, பார்ப்பான் என,
சித்தர் சூழ, சிவபிரான், தில்லை மூதூர் நடம் செய்வான்,
எத்தன் ஆகி வந்து, இல் புகுந்து, எமை ஆளுங்கொண்டு, எம் பணி கொள்வான்
வைத்த மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

5

மாய வாழ்க்கையை, மெய் என்று எண்ணி, மதித்திடா வகை நல்கினான்;
வேய தோள் உமை பங்கன், எங்கள் திருப்பெருந்துறை மேவினான்;
காயத்துள் அமுது ஊற ஊற, நீ கண்டுகொள் என்று காட்டிய
சேய மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

6

சித்தமே புகுந்து, எம்மை ஆட்கொண்டு, தீ வினை கெடுத்து, உய்யல் ஆம்
பத்தி தந்து, தன் பொன் கழல்கணே பன் மலர் கொய்து சேர்த்தலும்,
முத்தி தந்து, இந்த மூ உலகுக்கும் அப்புறத்து எமை வைத்திடும்
மத்தன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

7

பிறவி என்னும் இக் கடலை நீந்த, தன் பேர் அருள் தந்தருளினான்;
அறவை என்று அடியார்கள் தங்கள் அருள் குழாம் புகவிட்டு, நல்
உறவு செய்து, எனை உய்யக்கொண்ட பிரான் தன் உண்மைப் பெருக்கம் ஆம்
திறமை காட்டிய சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

8

புழுவினால் பொதிந்திடு குரம்பையில் பொய் தனை ஒழிவித்திடும்
எழில்கொள் சோதி, எம் ஈசன், எம்பிரான், என்னுடை அப்பன் என்று என்று,
தொழுத கையினர் ஆகி; தூ மலர்க் கண்கள் நீர் மல்கு தொண்டர்க்கு,
வழு இலா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, மலருமே!

9

வம்பனாய்த் திரிவேனை வா என்று வல் வினைப் பகை மாய்த்திடும்
உம்பரான், உலகு ஊடு அறுத்து, அப் புறத்தன் ஆய் நின்ற எம்பிரான்,
அன்பர் ஆனவர்க்கு அருளி, மெய் அடியார்கட்கு இன்பம் தழைத்திடும்
செம் பொன் மா மலர்ச் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே!

10

முத்தனை, முதல் சோதியை, முக் கண் அப்பனை, முதல் வித்தினை,
சித்தனை, சிவலோகனை, திரு நாமம் பாடித் திரிதரும்
பத்தர்காள்! இங்கே, வம்மின், நீர்; உங்கள் பாசம் தீரப் பணிமினோ;
சித்தம் ஆர்தரும் சேவடிக்கண், நம் சென்னி மன்னி, திகழுமே.!