இருநில மடந்தை இயல்பினின் உடுத்த
பொருகடல் மேகலை முகமெனப் பொலிந்த
ஒற்றி மாநகர் உடையோய்! உருவின்
பெற்றியொன் றாகப் பெற்றோர் யாரே?
5 மின்னின் பிறக்கம் துன்னும்நின் சடையே
மன்னிய அண்டம்நின் சென்னியின் வடிவே
பாவகன் பரிதி பனிமதி தன்னொடும்
மூவகைச் சுடரும்நின் நுதல்நேர் நாட்டம்
தண்ணொளி ஆரம் தாரா கணமே
10 விண்ணவர் முதலா வேறோர் இடமாக்
கொண்டுறை விசும்பே கோலநின் ஆகம்
எண்திசை திண்தோள் இருங்கடல் உடையே
அணியுடை அல்குல் அவனிமண் டலமே
மணிமுடிப் பாந்தள்நின் தாளிணை வழக்கே
15 ஒழியா தோடிய மாருதம் உயிர்ப்பே
வழுவா ஓசை முழுதும்நின் வாய்மொழி
வானவர் முதலா மன்னுயிர் பரந்த
ஊனமில் ஞானத் தொகுதிநின் உணர்வே
நெருங்கிய உலக நீர்மையின் நிற்றலும்
20 சுருங்கலும் விரிதலும் தோற்றல்நின் தொழிலே
அமைத்தலும் அழித்தலும் ஆங்கதன் முயற்சியும்
இமைத்தலும் விழித்தலும் ஆகும்நின் இயல்பே
என்றிவை முதலாம் இயல்புடை வடிவினோ
டொன்றிய துப்புரு இருவகை ஆகி
25 முத்திறக் குணத்து நால்வகைப் பிறவி
அத்திறத் தைம்பொறி அறுவகைச் சமயமோ
டேழுல காகி எண்வகை மூர்த்தியோ
டூழிதோ றூழி எண்ணிறந் தோங்கி
எவ்வகை அளவினில் கூடிநின்று
30 அவ்வகைப் பொருளும்நீ ஆகிய இடத்தே.