திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறி
ஆமதி யானென அமைத்த வாறே
அறனுரு வாகிய ஆனே றேறுதல்
இறைவன் யானென இயற்று மாறே
5 அதுஅவள் அவனென நின்றமை யார்க்கும்
பொதுநிலை யானென உணர்த்திய பொருளே
முக்கணன் என்பது முத்தீ வேள்வியில்
தொக்க தென்னிடை என்பதோர் சுருக்கே
வேத மான்மறி ஏந்துதல் மற்றதன்

10 நாதன் நானென நவிற்று மாறே
மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
மூவரும் யானென மொழிந்த வாறே
எண்வகை மூர்த்தி என்பதிவ் வுலகினில்
உண்மை யானென உணர்த்திய வாறே

15 நிலம்நீர் தீவளி உயர்வான் என்றும்
உலவாத் தொல்புகழ் உடையோய் என்றும்
பொருநற் பூதப் படையோய் என்றும்
தெருளநின் றுலகினில் தெருட்டு மாறே
ஈங்கிவை முதலா வண்ணமும் வடிவும்

20 ஒங்குநின் பெருமை உணர்த்தவும் உணராத்
தற்கொலி மாந்தர் தம்மிடைப் பிறந்த
சொற்பொருள் வன்மையின் சுழலும் மாந்தர்க்(கு)
ஆதி ஆகிய அறுதொழி லாளர்
ஒதல் ஒவா ஒற்றி யூர

25 சிறுவர்தம் செய்கையிற் படுத்து
முறுவலித் திருத்திநீ முகம்படு மளவே.

பொருள்

குரலிசை
காணொளி