காலற் சீறிய கழலோய் போற்றி
மூலத் தொகுதி முதல்வ போற்றி
ஒற்றி மாநகர் உடையோய் போற்றி
முற்றும் ஆகிய முதல்வ போற்றி
5 அணைதொறுஞ் சிறக்கும் அமிர்தே போற்றி
இணைபிறி தில்லா ஈச போற்றி
ஆர்வஞ் செய்பவர்க் கணியோய் போற்றி
தீர்வில் இன்சுவைத் தேனே போற்றி
வஞ்சனை மாந்தரை மறந்தோய் போற்றி
10 நஞ்சினை அமிர்தா நயந்தோய் போற்றி
விரிகடல் வையக வித்தே போற்றி
புரிவுடை வனமாய்ப் புணர்ந்தோய் போற்றி
காண முன்பொருள் கருத்துறை செம்மைக்(கு)
ஆணி யாகிய அரனே போற்றி
15 வெம்மை தண்மையென் றிவைகுணம் உடைமையின்
பெண்ணோ டாணெனும் பெயரோய் போற்றி
மேவிய அவர்தமை வீட்டினிற் படுக்கும்
தீப மாகிய சிவனே போற்றி
மாலோய் போற்றி மறையோய் போற்றி
20 மேலோய் போற்றி வேதிய போற்றி
சந்திர போற்றி தழலோய் போற்றி
இந்திர போற்றி இறைவ போற்றி
அமரா போற்றி அழகா போற்றி
குமரா போற்றி கூத்தா போற்றி
25 பொருளே போற்றி போற்றி என்றுனை
நாத்தழும் பிருக்க நவிற்றின் அல்லது
ஏத்துதற் குரியோர் யாரிரு நிலத்தே.