அளவினில் இறந்த பெருமையை ஆயினும்
எனதுளம் அகலா தொடுங்கிநின் றனையே
மெய்யினை இறந்த மெய்யினை ஆயினும்
வையகம் முழுதும்நின் வடிவெனப் படுமே
5 கைவலத் திலைநீ எனினும் காதல்
செய்வோர் வேண்டும் சிறப்பொழி யாயே
சொல்லிய வகையால் துணையலை ஆயினும்
நல்லுயிர்க் கூட்ட நாயகன் நீயே
எங்கும் உள்ளோய் எனினும் வஞ்சனை
10 தங்கிய அவரைச் சாராய் நீயே,
அஃதான்று
பிறவாப் பிறவியை, பெருகாப் பெருமையை
துறவாத் துறவியை தொடராத் தொடர்ச்சியை
நுகரா நுகர்ச்சியை நுணுகா நுணுக்கினை
15 அகலா அகற்சியை அணுகா அணிமையை
செய்யாச் செய்கையை சிறவாச் சிறப்பினை
வெய்யை தணியை விழுமியை நொய்யை
செய்யை பசியை வெளியை கரியை
ஆக்குதி அழித்தி ஆன பல்பொருள்
20 நீக்குதி தொகுத்தி நீங்குதி அடைதி
ஏனைய வாகிய எண்ணில் பல்குணம்
நினைதொறும் மயக்கும் நீர்மைய ஆதலின்
ஓங்குகடல் உடுத்த ஒற்றி யூர
ஈங்கிது மொழிவார் யாஅர் தாஅம்
25 சொல்நிலை சுருங்கின் அல்லது
நின்னியல் அறிவோர் யார்இரு நிலத்தே.