உருவாம் உலகுக் கொருவன் ஆகிய
பெரியோர் வடிவிற் பிறிதிங் கின்மையின்
எப்பொரு ளாயினும் இங்குள தாமெனின்
அப்பொருள் உனக்கே அவயவம் ஆதலின்
5 முன்னிய மூவெயில் முழங்கெரி ஊட்டித்
தொன்னீர் வையகம் துயர்கெடச் சூழ்ந்ததும்
வேள்வி மூர்த்திதன் தலையினை விடுத்ததும்
நீள்விசும் பாளிதன் தோளினை நெரித்ததும்
ஒங்கிய மறையோற் கொருமுகம் ஒழித்ததும்
10 பூங்கணை வேளைப் பொடிபட விழித்ததும்
திறல்கெட அரக்கனைத் திருவிரல் உறுத்ததும்
குறைபடக் கூற்றினைக் குறிப்பினில் அடர்த்ததும்
என்றிவை முதலா ஆள்வினை எல்லாம்
நின்றுழிச் செறிந்தவை நின்செய லாதலின்
15 உலவாத் தொல்புகழ் ஒற்றி யூர
பகர்வோர் நினக்குவே றின்மை கண்டவர்
நிகழ்ச்சியின் நிகழ்த்தின் அல்லது
புகழ்ச்சியிற் படுப்பரோ பொருளுணர்ந் தோரே.