திருநாவுக் கரசடி யவர்நாடற் கதிநிதி
தெளிதேனொத் தினியசொல் மடவார்ஊர்ப் பசிமுதல்
வருவானத் தரிவையர் நடமாடிச் சிலசில
வசியாகச் சொலுமவை துகளாகக் கருதிமெய்
உருஞானத் திரள்மனம் உருகாநெக் கழுதுகண்
உழவாரப் படைகையில் உடையான்வைத் தனதமிழ்
குருவாகக் கொடுசிவ னடிசூடித் திரிபவர்
குறுகார்புக் கிடர்படு குடர்யோனிக் குழியிலே.