தாமரைநகு மகவிதழ் தகுவன
சாய்பெறுசிறு தளிரினை யனையன;
சார்தருமடி யவரிடர் தடிவன;
தாயினும்நல கருணையை யுடையன;
தூமதியினை யொருபது கொடுசெய்த
சோதியின்மிகு கதிரினை யுடையன;
தூயனதவ முனிவர்கள் தொழுவன
தோமறுகுண நிலையின; தலையின
ஓமரசினை மறைகளின் முடிவுகள்
ஓலிடுபரி சொடுதொடர் வரியன;
ஓவறுமுணர் வொடுசிவ வொளியன;
ஊறியகசி வொடுகவி செய்தபுகழ்
ஆமரசுய ரகம்நெகு மவருளன்
ஆரரசதி கையினர னருளவன்
ஆமரசுகொ ளரசெனை வழிமுழு(து)
ஆளரசுத னடியிணை மலர்களே.