சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும் மற்றைத்
திருமால் தன் செழுந் தலையும் பொன்றச் சிந்தி,
உரம் ஏற்ற இரவி பல்-தகர்த்து, சோமன்
ஒளிர்கலைகள் பட உழக்கி, உயிரை நல்கி,
நரை ஏற்ற விடை ஏறி, நாகம் பூண்ட நம்பியையே,
“மறை நான்கும் ஓலம் இட்டு
வரம் ஏற்கும் மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே
நான் அரற்றி நைகின்றேனே.