அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை,
அகத்தியனை உகப்பானை, அயன் மால் தேட
நின்றானை, கிடந்த கடல் நஞ்சு உண்டானை, நேரிழையைக்
கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை, மீயச்சூர் மேவினானை, மெல்லியலாள்
தவத்தின் நிறை அளக்கல் உற்றுச்
சென்றானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.