பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவீழிமிழலை
வ.எண் பாடல்
1

போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே
உடை ஆடை போற்றினானை,
பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய்
நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய
நினைந்த தெய்வத்-
தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.

2

சவம் தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு தலை ஓடு
மயிர்க்கயிறு தரித்தான் தன்னை,
பவம் தாங்கு பாசு பத வேடத்தானை, பண்டு அமரர்
கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கழல் அடைந்தான்
மேல் கறுத்த காலன் வீழச்
சிவந்தானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.

3

அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை,
அகத்தியனை உகப்பானை, அயன் மால் தேட
நின்றானை, கிடந்த கடல் நஞ்சு உண்டானை, நேரிழையைக்
கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை, மீயச்சூர் மேவினானை, மெல்லியலாள்
தவத்தின் நிறை அளக்கல் உற்றுச்
சென்றானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.

4

தூயானை, சுடர்ப் பவளச்சோதியானை, தோன்றிய எவ்
உயிர்க்கும் துணை ஆய் நின்ற
தாயானை, சக்கரம் மாற்கு ஈந்தான் தன்னை, சங்கரனை,
சந்தோக சாமம் ஓதும்
வாயானை, மந்திரிப்பார் மனத்து உளானை,
வஞ்சனையால் அஞ்சு எழுத்தும் வழுத்துவார்க்குச்
சேயானை, திரு வீழிமிழலையானை, சேராதார்
தீநெறிக்கே சேர்கின்றாரே.

5

நல்-தவத்தின் நல்லானை, தீது ஆய் வந்த நஞ்சு அமுது
செய்தானை, அமுதம் உண்ட
மற்ற(அ)அமரர் உலந்தாலும் உலவாதானை, வருகாலம்
செல்காலம் வந்தகாலம்
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு
சுடரை, இரு விசும்பின் ஊர்மூன்று ஒன்றச்
செற்றவனை, திரு வீழிமிழலையானை, சேராதார்
தீநெறிக்கே சேர்கின்றாரே.

6

மை வானம் மிடற்றானை, அவ் வான் மின் போல் வளர்
சடைமேல் மதியானை, மழை ஆய் எங்கும்
பெய்வானை, பிச்சாடல் ஆடுவானை, பிலவாய
பேய்க்கணங்கள் ஆர்க்கச் சூல் அம்பு
ஒய்வானை, பொய் இலா மெய்யன் தன்னை, பூதலமும்
மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
செய்வானை, திரு வீழிமிழலையானை, சேராதார்
தீநெறிக்கே சேர்கின்றாரே.

7

மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை, வெவ்வேறு
ஆய் இரு மூன்று சமயம் ஆகிப்
புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை, பொன்னுலகத்தவர்
போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை, தான் அன்றி வேறு ஒன்று இல்லாத் தத்துவனை,
தடவரையை நடுவு செய்த
திக்கானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.

8

வானவர் கோன் தோள் இறுத்த மைந்தன் தன்னை, வளை
குளமும் மறைக்காடும் மன்னினானை,
ஊனவனை, உயிரவனை, ஒரு நாள் பார்த்தன் உயர்
தவத்தின் நிலை அறியல் உற்றுச் சென்ற
கானவனை, கயிலாயம் மேவினானை, கங்கை சேர்
சடையானை, கலந்தார்க்கு என்றும்
தேனவனை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.

9

பரத்தானை; இப் பக்கம் பல ஆனானை; பசுபதியை; பத்தர்க்கு
முத்தி காட்டும்
வரத்தானை; வணங்குவார் மனத்து உளானை; மாருதம், மால்,
எரி, மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம்
சரத்தானை; சரத்தையும் தன் தாள்கீழ் வைத்த தபோதனனை;
சடாமகுடத்து அணிந்த பைங்கண்
சிரத்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.

10

அறுத்தானை, அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை; அஞ்சாதே
வரை எடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை; எழு நரம்பின் இசை கேட்டானை; இந்து வினைத்
தேய்த்தானை; இரவிதன் பல்
பறித்தானை; பகீரதற்கா வானோர் வேண்டப் பரந்து இழியும்
புனல் கங்கை பனி போல் ஆகச்
செறித்தானை; திரு வீழிமிழலையானை; சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவீழிமிழலை
வ.எண் பாடல்
1

கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; கந்த மாதனத்து
உளார்; காளத்தி(ய்)யார்;
மயிலாடு துறை உளார்; மாகாளத்தார்; வக்கரையார்;
சக்கரம் மாற்கு ஈந்தார்; வாய்ந்த
அயில்வாய சூலமும், காபால(ம்)மும், அமரும்
திருக்கரத்தார்; ஆன் ஏறு ஏறி,
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே
மேவினாரே.

2

பூதி அணி பொன்நிறத்தர்; பூணநூலர்; பொங்கு அரவர்;
சங்கரர்; வெண்குழை ஓர் காதர்;
கேதிசரம் மேவினார்; கேதாரத்தார்; கெடில வட அதிகை
வீரட்டத்தார்;
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார்; மழபாடி
மேய மணவாள(ன்)னார்;
வேதி குடி உளார்; மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே.

3

அண்ணாமலை அமர்ந்தார்; ஆரூர் உள்ளார்; அளப்பூரார்;
அந்தணர்கள் மாடக்கோயில்
உண்ணாழிகையார், உமையாளோடும்; இமையோர்
பெருமானார்; ஒற்றியூரார்;
பெண்ணா கடத்துப் பெருந் தூங்கானை-மாடத்தார்;
கூடத்தார்; பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே
மேவினாரே.

4

வெண்காட்டார்; செங்காட்டங்குடியார்; வெண்ணி நன்நகரார்;
வேட்களத்தார்; வேதம் நாவார்;
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார்;
பராய்த்துறையார்; சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர்
வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி உரித்து,
உரிவை போர்த்த விடலை வேடம்
விண் காட்டும் பிறை நுதலி அஞ்சக் காட்டி,
வீழிமிழலையே மேவினாரே.

5

புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் புலியூர்ச் சிற்றம்பலத்தே
நடம் ஆடு(வ்)வார்;
உடை சூழ்ந்த புலித்தோலர்; கலிக் கச்சி(ம்) மேற்-றளி உளார்;
குளிர்சோலை ஏகம்பத்தார்;
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காள(ன்)னார்; கழுமலத்தார்;
செழு மலர்த்தார்க் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே
மேவினாரே.

6

பெரும் புலியூர் விரும்பினார்; பெரும் பாழி(ய்)யார்; பெரும்
பற்றப்புலியூர் மூலட்டானத்தார்;
இரும்புதலார்; இரும்பூளை உள்ளார்; ஏர் ஆர் இன்னம்பரார்;
ஈங்கோய் மலையார்; இன்சொல்
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார்;
கருப்பறியலூரார்; கரவீரத்தார்
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே
மேவினாரே.

7

மறைக்காட்டார்; வலிவலத்தார்; வாய்மூர் மேயார்; வாழ்கொளி
புத்தூரார்; மாகாளத்தார்;
கறை(க்)க்காட்டும் கண்டனார்; காபாலி(ய்)யார்; கற்குடியார்;
விற்குடியார்; கானப்பேரார்;
பறை(க்)க்காட்டும் குழிவிழிகண் பல்பேய் சூழப் பழையனூர்
ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர்
மிறை(க்)க்காட்டும் கொடுங் காலன் வீடப் பாய்ந்தார்
வீழிமிழலையே மேவினாரே.

8

அஞ்சைக்களத்து உள்ளார்; ஐயாற்று உள்ளார்; ஆரூரார்;
பேரூரார்; அழுந்தூர் உள்ளார்;
தஞ்சைத் தளிக்குளத்தார்; தக்களூரார்; சாந்தை அயவந்தி
தங்கினார் தாம்;
நஞ்சைத் தமக்கு அமுதா உண்ட நம்பர்; நாகேச்சுரத்து
உள்ளார்; நாரையூரார்;
வெஞ்சொல் சமண் சிறையில் என்னை மீட்டார்
வீழிமிழலையே மேவினாரே.

9

கொண்டல் உள்ளார்; கொண்டீச்சுரத்தின் உள்ளார்; கோவலூர்
வீரட்டம் கோயில் கொண்டார்;
தண்டலையார்; தலையாலங்காட்டில் உள்ளார்; தலைச்சங்கைப்
பெருங்கோயில் தங்கினார் தாம்;
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நன்நீர்
வலஞ்சுழியார்; வைகலில் மேல்மாடத்து உள்ளார்;
வெண்தலை கைக் கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே
மேவினாரே.

10

அரிச்சந்திரத்து உள்ளார்; அம்பர் உள்ளார்; அரிபிரமர்
இந்திரர்க்கும் அரியர் ஆனார்;
புரிச்சந்திரத்து உள்ளார்; போகத்து உள்ளார்; பொருப்பு
அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரிச் சந்தி வேட்கும் இடத்தார்; ஏம-கூடத்தார் பாடத்
தேன் இசை ஆர் கீதர்;
விரிச்சு அங்கை எரிக் கொண்டு அங்கு ஆடும் வேடர்
வீழிமிழலையே மேவினாரே.

11

புன்கூரார்; புறம்பயத்தார்; புத்தூர் உள்ளார்; பூவணத்தார்;
புலிவலத்தார்; வலியின் மிக்க
தன் கூர்மை கருதி வரை எடுக்கல் உற்றான் தலைகளொடு
மலைகள் அன தாளும் தோளும்
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி, பொருப்பு
அதன் கீழ் நெரித்து, அருள்செய் புவன நாதர்;
மின் கூரும் சடைமுடியார்; விடையின் பாகர் வீழிமிழலையே
மேவினாரே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவீழிமிழலை
வ.எண் பாடல்
1

கண் அவன் காண்; கண் ஒளி சேர் காட்சியான் காண்;
கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற
பண் அவன் காண்; பண் அவற்றின் திறம் ஆனான் காண்;
பழம் ஆகிச் சுவை ஆகிப் பயக்கின்றான் காண்;
மண் அவன் காண்; தீ அவன் காண்; நீர் ஆனான் காண்;
வந்து அலைக்கும் மாருதன் காண்; மழை மேகம் சேர்
விண் அவன் காண்; விண்ணவர்க்கும் மேல் ஆனான்
காண் விண் இழி தண் வீழிமிழலையானே.

2

ஆலைப் படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சு
எழுத்தின் நாமத்தான் காண்;
சீலம் உடை அடியார் சிந்தையான் காண்; திரி புரம் மூன்று
எரிபடுத்த சிலையினான் காண்;
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண்; பண்டரங்க
வேடன் காண்; பலி தேர்வான் காண்;
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண்
வீழிமிழலையானே.

3

தண்மையொடு வெம்மை தான் ஆயினான் காண்; சக்கரம்
புள்பாகற்கு அருள்செய்தான் காண்;
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண்; காமன்
உடல் வேவித்த கண்ணினான் காண்;
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான்
காண்; இருவர்க்கு எரி ஆய் அருளினான் காண்;
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி
தண் வீழிமிழலையானே.

4

காது இசைந்த சங்கக் குழையினான் காண்; கனகமலை
அனைய காட்சியான் காண்;
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண்; வல்
ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்;
ஆதியன் காண்; அண்டத்துக்கு அப்பாலான் காண்;
ஐந்தலை மாநாகம் நாண் ஆக்கினான் காண்;
வேதியன் காண்; வேதவிதி காட்டினான் காண் விண்
இழி தண் வீழிமிழலையானே.

5

நெய்யினொடு பால் இளநீர் ஆடினான் காண்; நித்தமணவாளன்
என நிற்கின்றான் காண்;
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண்; காலன் உயிர்
காலால் கழிவித்தான் காண்;
செய்ய திருமேனியில் வெண்நீற்றினான் காண்; செஞ்சடைமேல்
வெண்மதியம் சேர்த்தினான் காண்;
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண்
வீழிமிழலையானே.

6

கண் துஞ்சும் கரு நெடுமால் ஆழி வேண்டி, கண் இடந்து,
சூட்ட, கண்டு அருளுவான் காண்;
வண்டு உண்ணும் மதுக் கொன்றை, வன்னி, மத்தம்,
வான்கங்கை, சடைக் கரந்த மாதேவன் காண்;
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண்; பரமன்
காண்; பரமேட்டி ஆயினான் காண்;
வெண்திங்கள் அரவொடு செஞ்சடை வைத்தான் காண்
விண் இழி தண் வீழிமிழலை யானே.

7

கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு
அருள்செய்த கருணையான் காண்;
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண்;
வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்;
தற்பரம் ஆய் நற்பரம் ஆய் நிற்கின்றான் காண்;
சதாசிவன் காண்; தன் ஒப்பார் இல்லாதான் காண்;
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண்
இழி தண் வீழிமிழலையானே.

8

மெய்த்தவன் காண், மெய்த்தவத்தில் நிற்பார்க்கு எல்லாம்;
விருப்பு இலா இருப்புமன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன் காண்; புத்தன் மறவாது ஓடி எறி சல்லி
புதுமலர்கள் ஆக்கினான் காண்;
உய்த்தவன் காண், உயர் கதிக்கே உள்கினாரை; உலகு
அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்யச் செய்யும்
வித்தகன் காண் வித்தகர் தாம் விரும்பி ஏத்தும் விண்
இழி தண் வீழிமிழலையானே.

9

சந்திரனைத் திருவடியால்-தளர்வித்தான் காண்; தக்கனையும
முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்;
இந்திரனைத் தோள் முறிவித்து அருள் செய்தான் காண்;
ஈசன் காண்; நேசன் காண், நினைவோர்க்கு எல்லாம்,
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண்; மாலொடு
அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெந்தழலின் விரி சுடர் ஆய் ஓங்கினான் காண் விண் இழி
தண் வீழிமிழலையானே.

10

ஈங்கைப் பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண்; எம்மான்காண்;
கைம்மாவின் உரி போர்த்தான் காண்;
ஓங்கு மலைக்கு அரையன் தன் பாவையோடும் ஓர் உரு ஆய்
நின்றான் காண்; ஓங்காரன் காண்;
கோங்கு மலர்க்கொன்றை அம்தார்க் கண்ணியான் காண்;
கொல் ஏறு வெல் கொடிமேல் கூட்டினான் காண்;
வேங்கை வரிப் புலித்தோல் மேல் ஆடையான் காண் விண்
இழி தண் வீழிமிழலையானே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவீழிமிழலை
வ.எண் பாடல்
1

மான் ஏறு கரம் உடைய வரதர் போலும்; மால்வரை கால்
வளை வில்லா வளைத்தார் போலும்;
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும்; கட்டங்கம், கொடி,
துடி, கைக் கொண்டார் போலும்;
தேன் ஏறு திரு இதழித்தாரார் போலும்; திருவீழிமிழலை
அமர் செல்வர் போலும்;
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை
ஆள் உடைய அடிகள் தாமே.

2

சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானைச் சக்கரத்தால்
பிளப்பித்த சதுரர் போலும்;
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும்; நாரணனை
இடப்பாகத்து அடைத்தார் போலும்;
குமரனையும் மகன் ஆக உடையார் போலும்; குளிர்
வீழிமிழலை அமர் குழகர் போலும்;
அமரர்கள் பின் அமுது உண, நஞ்சு உண்டார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

3

நீறு அணிந்த திருமேனி நிமலர் போலும்; நேமி, நெடுமாற்கு,
அருளிச் செய்தார் போலும்;
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும்; எயில்
மூன்றும் எரிசரத்தால் எய்தார் போலும்;
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும்; வியன்
வீழிமிழலை உறை விகிர்தர் போலும்;
ஆறு அணிந்த சடா மகுடத்து அழகர் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

4

கை வேழ முகத்தவனைப் படைத்தார் போலும்; கயாசுரனை
அவனால் கொல்வித்தார் போலும்;
செய் வேள்வித் தக்கனை முன் சிதைத்தார் போலும்; திசை
முகன் தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்;
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும்; வியன்
வீழிமிழலை இடம் கொண்டார் போலும்;
ஐவேள்வி, ஆறு அங்கம், ஆனார் போலும் அடியேனை
ஆள் உடைய அடிகள் தாமே.

5

துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும்; சுடர்
மூன்றும் சோதியும் ஆய்த் யார் போலும்;
பொன் ஒத்த திருமேனிப் புனிதர் போலும்; பூதகணம் புடை
சூழ வருவார் போலும்;
மின் ஒத்த செஞ்சடை வெண்பிறையார் போலும்; வியன்
வீழிமிழலை சேர் விமலர் போலும்;
அன்னத்தேர் அயன் முடி சேர் அடிகள் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

6

மாலாலும் அறிவு அரிய வரதர் போலும்; மறவாதார் பிறப்பு
அறுக்க வல்லார் போலும்;
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும்; நாம
எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்;
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும்;
வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

7

பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்; பைந்நாகம்
அரைக்கு அசைத்த பரமர் போலும்;
மஞ்சு அடுத்த மணி நீல கண்டர் போலும்; வட கயிலை
மலை உடைய மணாளர் போலும்;
செஞ்சடைக்கண் வெண் பிறை கொண்டு அணிந்தார்
போலும்; திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்;
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

8

குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும்;
குடமூக்கில் இடம் ஆக்கிக் கொண்டார் போலும்;
புண்டரிகப் புதுமலர் ஆதனத்தார் போலும்; புள் அரசைக்
கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்;
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும்;
வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்;
அண்டத்து உப் புறத்து அப்பால் ஆனார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

9

முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய்
பவளக்கொடி அனைய சடையார் போலும்;
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்;
இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்;
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன்
வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

10

கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்;
கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்;
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்;
ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்;
விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்;
வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்;
அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும்
அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.

11

கயிலாயமலை எடுத்தான் கதறி வீழக் கால்விரலால் அடர்த்து
அருளிச்செய்தார் போலும்;
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்கக் கூத்து
ஆட வல்ல குழகர் போலும்;
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும்; வியன்
வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்;
அயில் ஆய மூ இலைவேல் படையார் போலும் அடியேனை
ஆள் உடைய அடிகள் தாமே.