கல்பொலி தோள் சலந்தரனைப் பிளந்த ஆழி கருமாலுக்கு
அருள்செய்த கருணையான் காண்;
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண்;
வேடுவனாய்ப் போர் பொருது காட்டினான் காண்;
தற்பரம் ஆய் நற்பரம் ஆய் நிற்கின்றான் காண்;
சதாசிவன் காண்; தன் ஒப்பார் இல்லாதான் காண்;
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண்
இழி தண் வீழிமிழலையானே.