பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவையாறு
வ.எண் பாடல்
1

கலை ஆர் மதியோடு உர நீரும்
நிலை ஆர் சடையார் இடம் ஆகும்
மலை ஆரமும் மா மணி சந்தோடு
அலை ஆர் புனல் சேரும் ஐயாறே.

2

மதி ஒன்றிய கொன்றை வடத்தன்,
மதி ஒன்ற உதைத்தவர் வாழ்வு
மதியினொடு சேர் கொடி மாடம்
மதியம் பயில்கின்ற ஐயாறே.

3

கொக்கின் இறகினொடு வன்னி
புக்க சடையார்க்கு இடம் ஆகும்
திக்கின் இசை தேவர் வணங்கும்
அக்கின் அரையாரது ஐயாறே.

4

சிறை கொண்ட புரம் அவை சிந்தக்
கறை கொண்டவர் காதல் செய் கோயில்
மறை கொண்ட நல் வானவர் தம்மில்
அறையும் ஒலி சேரும் ஐயாறே.

5

உமையாள் ஒரு பாகம் அது ஆகச்
சமைவார் அவர் சார்வு இடம் ஆகும்
அமையார் உடல் சோர்தரு முத்தம்
அமையா வரும் அம் தண் ஐயாறே.

6

தலையின் தொடை மாலை அணிந்து
கலை கொண்டது ஒரு கையினர் சேர்வு ஆம்
நிலை கொண்ட மனத்தவர் நித்தம்
மலர் கொண்டு வணங்கும் ஐயாறே.

7

வரம் ஒன்றிய மா மலரோன் தன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வு ஆம்
வரை நின்று இழி வார் தரு பொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே.

8

வரை ஒன்று அது எடுத்த அரக்கன்
சிரம் மங்க நெரித்தவர் சேர்வு ஆம்
விரையின் மலர் மேதகு பொன்னித்
திரை தன்னொடு சேரும் ஐயாறே.

9

சங்கக் கயனும் அறியாமை
பொங்கும் சுடர் ஆனவர் கோயில்
கொங்கில் பொலியும் புனல் கொண்டு
அங்கிக்கு எதிர் காட்டும் ஐயாறே.

10

துவர் ஆடையர், தோல் உடையார்கள்,
கவர் வாய்மொழி காதல் செய்யாதே,
தவராசர்கள் தாமரையானோடு
அவர்தாம் அணை அம் தண் ஐயாறே.

11

கலை ஆர் கலிக்காழியர் மன்னன்-
நலம் ஆர்தரு ஞானசம்பந்தன்-
அலை ஆர் புனல் சூழும் ஐயாற்றைச்
சொலும் மாலை வல்லார் துயர் வீடே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவையாறு
வ.எண் பாடல்
1

பணிந்தவர் அருவினை பற்று அறுத்து அருள்செயத்
துணிந்தவன், தோலொடு நூல் துதை மார்பினில்
பிணிந்தவன், அரவொடு பேர் எழில் ஆமை கொண்டு
அணிந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

2

கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அடப்
பார்த்தவன்; பனிமதி படர் சடை வைத்து,
போர்த்தவன் கரி உரி; புலி அதள், அரவு, அரை
ஆர்த்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

3

வரிந்த வெஞ்சிலை பிடித்து, அவுணர்தம் வள நகர்
எரிந்து அற எய்தவன்; எழில் திகழ் மலர்மேல்
இருந்தவன் சிரம் அது, இமையவர் குறை கொள,
அரிந்தவன்; வள நகர் அம் தண் ஐயாறே.

4

வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை
மாய்ந்து அற எய்தவன், வளர்பிறை விரிபுனல்
தோய்ந்து எழு சடையினன், தொல்மறை ஆறு அங்கம்
ஆய்ந்தவன், வள நகர் அம் தண் ஐயாறே.

5

வான் அமர் மதி புல்கு சடை இடை அரவொடு
தேன் அமர் கொன்றையன், திகழ்தரு மார்பினன்,
மான் அன மென் விழி மங்கை ஒர் பாகமும்
ஆனவன், வள நகர் அம் தண் ஐயாறே.

6

முன்பனை, முனிவரொடு அமரர்கள் தொழுது எழும்
இன்பனை, இணை இல இறைவனை, எழில் திகழ்
என் பொனை, ஏதம் இல் வேதியர் தாம் தொழும்
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே.

7

வன்திறல் அவுணர்தம் வள நகர் எரி இடை
வெந்து அற எய்தவன், விளங்கிய மார்பினில்
பந்து அமர் மெல் விரல் பாகம் அது ஆகி, தன்
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே.

8

விடைத்த வல் அரக்கன் நல் வெற்பினை எடுத்தலும்,
அடித்தலத்தால் இறை ஊன்றி, மற்று அவனது
முடித்தலை தோள் அவை நெரிதர, முறைமுறை
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே.

9

விண்ணவர் தம்மொடு, வெங்கதிரோன், அனல்,
எண் இலி தேவர்கள், இந்திரன், வழிபட,
கண்ணனும் பிரமனும் காண்பு அரிது ஆகிய
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே.

10

மருள் உடை மனத்து வன் சமணர்கள், மாசு அறா
இருள் உடை இணைத்துவர்ப் போர்வையினார்களும்,
தெருள் உடை மனத்தவர்; தேறுமின், திண்ணமா
அருள் உடை அடிகள் தம் அம் தண் ஐயாறே!

11

நலம் மலி ஞானசம்பந்தனது இன்தமிழ்
அலை மலி புனல் மல்கும் அம் தண் ஐயாற்றினைக்
கலை மலி தமிழ் இவை கற்று வல்லார் மிக
நலம் மலி புகழ் மிகு நன்மையர்தாமே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவையாறு
வ.எண் பாடல்
1

புலன் ஐந்தும் பொறி கலங்கி, நெறி மயங்கி, அறிவு அழிந்திட்டு,
ஐம் மேல் உந்தி,
அலமந்த போது ஆக, "அஞ்சேல்!" என்று அருள் செய்வான்
அமரும் கோயில்
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட, முழவு அதிர, மழை என்று
அஞ்சி,
சிலமந்தி அலமந்து, மரம் ஏறி, முகில் பார்க்கும் திரு ஐயாறே.

2

விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன்
பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி, "அம் சொலீர், பலி!" என்னும்
அடிகள் கோயில்
கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,
திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும்
திரு ஐயாறே.

3

கங்காளர், கயிலாயமலையாளர், கானப்பேராளர், மங்கை-
பங்காளர், திரிசூலப்படையாளர், விடையாளர், பயிலும் கோயில்
கொங்கு ஆள் அப் பொழில் நுழைந்து, கூர்வாயால் இறகு
உலர்த்தி, கூதல் நீங்கி,
செங்கால் நல் வெண்குருகு, பைங்கானல் இரை தேரும் திரு ஐயாறே.

4

ஊன் பாயும் உடைதலைக் கொண்டு ஊர் ஊரன் பலிக்கு உழல்வார்,
உமையாள்பங்கர்,
தான் பாயும் விடை ஏறும் சங்கரனார், தழல் உருவர், தங்கும்
கோயில்
மான் பாய, வயல் அருகே மரம் ஏறி, மந்தி பாய் மடுக்கள் தோறும்
தேன் பாய, மீன் பாய, செழுங்கமலமொட்டு அலரும் திரு ஐயாறே.

5

நீரோடு கூவிளமும், நிலாமதியும், வெள் எருக்கும், நிறைந்த
கொன்றைத்
தாரோடு, தண்கரந்தை, சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும்
கோயில்
கார் ஓடி விசும்பு அளந்து, கடி நாறும் பொழில் அணைந்த கமழ்
தார் வீதித்
தேர் ஓடும் அரங்கு ஏறி, சேயிழையார் நடம் பயிலும் திரு ஐயாறே.

6

வேந்து ஆகி, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறி காட்டும்
விகிர்தன் ஆகி,
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும்
கோயில்
காந்தாரம் இசை அமைத்துக் காரிகையார் பண் பாட, கவின் ஆர் வீதி,
"தேம்தாம்" என்று, அரங்கு ஏறிச் சேயிழையார் நடம் ஆடும்
திரு ஐயாறே.

7

நின்று உலாம் நெடுவிசும்பில் நெருக்கி வரு புரம் மூன்றும்
நீள்வாய் அம்பு
சென்று உலாம்படி தொட்ட சிலையாளி, மலையாளி, சேரும்
கோயில்
குன்று எலாம் குயில் கூவ, கொழும் பிரசமலர் பாய்ந்து வாசம்
மல்கு
தென்றலார் அடி வருட, செழுங் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே.

8

அஞ்சாதே கயிலாயமலை எடுத்த அரக்கர்கோன் தலைகள் பத்தும்,
மஞ்சு ஆடு தோள், நெரிய அடர்த்து, அவனுக்கு அருள்புரிந்த
மைந்தர் கோயில்
இஞ்சாயல் இளந் தெங்கின் பழம் வீழ, இள மேதி இரிந்து அங்கு
ஓடி,
செஞ்சாலிக்கதிர் உழக்கி, செழுங் கமல வயல் படியும் திரு ஐயாறே.

9

மேல் ஓடி விசும்பு அணவி, வியன் நிலத்தை மிக அகழ்ந்து,
மிக்கு நாடும்
மாலோடு நான்முகனும் அறியாத வகை நின்றான் மன்னும் கோயில்
கோல் ஓட, கோல்வளையார் கூத்தாட, குவிமுலையார் முகத்தில்
நின்று
சேல் ஓட, சிலை ஆட, சேயிழையார் நடம் ஆடும் திரு ஐயாறே.

10

குண்டாடு குற்று உடுக்கைச் சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று
இல்லா
மிண்டாடும் மிண்டர் உரை கேளாதே, ஆள் ஆமின், மேவித் தொண்டீர்!
எண்தோளர், முக்கண்ணர், எம் ஈசர், இறைவர், இனிது அமரும்
கோயில்
செண்டு ஆடு புனல் பொன்னிச் செழு மணிகள் வந்து அலைக்கும்
திரு ஐயாறே.

11

அன்னம் மலி பொழில் புடை சூழ் ஐயாற்று எம்பெருமானை,
அம் தண் காழி
மன்னிய சீர் மறை நாவன்-வளர் ஞானசம்பந்தன்-மருவு பாடல்
இன் இசையால் இவைபத்தும் இசையுங்கால், ஈசன் அடி
ஏத்துவார்கள்
தன் இசையோடு அமருலகில் தவநெறி சென்று எய்துவார்,
தாழாது அன்றே!