பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவிடைமருதூர்
வ.எண் பாடல்
1

பொங்கு நூல் மார்பினீர்! பூதப்படையினீர்! பூங் கங்கை
தங்கு செஞ்சடையினீர்! சாமவேதம் ஓதினீர்!
எங்கும் எழில் ஆர் மறையோர்கள் முறையால் ஏத்த,
இடைமருதில்,
மங்குல் தோய் கோயிலே கோயில் ஆக மகிழ்ந்தீரே.

2

நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நெற்றித் திருக்கண் நிகழ்வித்தீர்!
போர் ஆர்ந்த வெண் மழு ஒன்று உடையீர்! பூதம் பாடலீர்!
ஏர் ஆர்ந்த மேகலையாள் பாகம் கொண்டீர்! இடைமருதில்,
சீர் ஆர்ந்த கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

3

அழல் மல்கும் அங்கையில் ஏந்தி, பூதம் அவை பாட,
சுழல் மல்கும் ஆடலீர்! சுடுகாடு அல்லால் கருதாதீர்!
எழில் மல்கும் நால் மறையோர் முறையால் ஏத்த,
இடைமருதில்,
பொழில் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.

4

பொல்லாப் படுதலை ஒன்று ஏந்திப் புறங்காட்டு ஆடலீர்!
வில்லால் புரம் மூன்றும் எரித்தீர்! விடை ஆர் கொடியினீர்!
எல்லாக்கணங்களும் முறையால் ஏத்த, இடைமருதில்,
செல்வாய கோயிலே கோயில் ஆகச் சேர்ந்தீரே.

5

வருந்திய மா தவத்தோர், வானோர், ஏனோர், வந்து ஈண்டி
பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் பொலிவு எய்த,
திருந்திய நால்மறையோர் இனிதா ஏத்த, இடைமருதில்,
பொருந்திய கோயிலே கோயில் ஆகப் புக்கீரே.

6

சலம் மல்கு செஞ்சடையீர்! சாந்தம் நீறு பூசினீர்!
வலம் மல்கு வெண்மழு ஒன்று ஏந்தி, மயானத்து ஆடலீர்!
இலம் மல்கு நால்மறையோர் சீரால் ஏத்த, இடைமருதில்,
புலம் மல்கு கோயிலே கோயில் ஆகப் பொலிந்தீரே.

7

புனம் மல்கு கொன்றையீர்! புலியின் அதளீர்! பொலிவு
ஆர்ந்த
சினம் மல்கு மால்விடையீர்! செய்யீர்! கரிய கண்டத்தீர்!
இனம் மல்கு நால்மறையோர் ஏத்தும் சீர் கொள்
இடைமருதில்,
கனம் மல்கு கோயிலே கோயில் ஆகக் கலந்தீரே.

8

சிலை உய்த்த வெங்கணையால் புரம் மூன்று எரித்தீர்!
திறல் அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர்! தையல் பாகத்தீர்!
இலை மொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த
இடைமருதில்,
நலம் மொய்த்த கோயிலே கோயில் ஆக நயந்தீரே.

9

மறை மல்கு நான்முகனும், மாலும் அறியா வண்ணத்தீர்!
கறை மல்கு கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினீர்!
அறை மல்கு வண்டு இனங்கள் ஆலும் சோலை
இடைமருதில்,
நிறை மல்கு கோயிலே கோயில் ஆக நிகழ்ந்தீரே.

10

சின் போர்வைச் சாக்கியரும், மாசு சேரும் சமணரும்,
துன்பு ஆய கட்டுரைகள் சொல்லி அல்லல் தூற்றவே,
இன்பு ஆய அந்தணர்கள் ஏத்தும் ஏர் கொள்
இடைமருதில்,
அன்பு ஆய கோயிலே கோயில் ஆக அமர்ந்தீரே.

11

கல்லின் மணி மாடக் கழுமலத்தார் காவலவன்
நல்ல அருமறையான், நல் தமிழ் ஞானசம்பந்தன்
எல்லி இடைமருதில் ஏத்து பாடல் இவை பத்தும்
சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லையே.