பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருநள்ளாறு
வ.எண் பாடல்
1

ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர்
கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,
நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.

2

விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்த
புண்ணியன் இருக்கும் இடம் என்பர் புவிதன்மேல்
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே.

3

விளங்கு இழை மடந்தைமலைமங்கை ஒருபாகத்து
உளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர்
வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி,
நளன் கெழுவி நாளும் வழிபாடுசெய் நள்ளாறே.

4

கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்
செக்கர் அவர், சேரும் இடம் என்பர் தடம் மூழ்கிப்
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,
நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.

5

நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார்
வஞ்சம் அது அறுத்துஅருளும் மற்றவனை; வானோர்
அஞ்ச, முதுகுஆகியவர் கைதொழ, எழுந்த
நஞ்சு அமுதுசெய்தவன்; இருப்பு இடம் நள்ளாறே.

6

பாலன் அடி பேண, அவன் ஆர் உயிர் குறைக்கும்
காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர் ஆம்
கோல மலர், நீர்க் குடம், எடுத்து மறையாளர்
நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.

7

நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவை
பாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை
வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்
ஓதி, அரன்நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.

8

கடுத்து, வல் அரக்கன், முன் நெருக்கி வரைதன்னை
எடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும்
அடர்த்தவர்தமக்கு இடம் அது என்பர் அளி பாட,
நடத்த கலவத்திரள்கள் வைகிய நள்ளாறே.

9

உயர்ந்தவன், உருக்கொடு திரிந்து, உலகம் எல்லாம்
பயந்தவன், நினைப்பரிய பண்பன் இடம் என்பர்
வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்
நயம் தரும் அ வேதஒலி ஆர் திரு நள்ளாறே.

10

சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்
பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன் ஊர்
மந்த முழவம் தரு விழாஒலியும், வேதச்
சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே.

11

ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதனோடும்
நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றை,
மாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்
பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.