பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பவனம் ஆய், சோடை ஆய், நா எழா, பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல, நீ வெள்கினாயே? கவனம் ஆய்ப் பாய்வது ஓர் ஏறு உகந்து ஏறிய காள கண்டன் அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
தந்தையார் போயினார்; தாயரும் போயினார்; தாமும் போவார்; கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார், கொண்டு போவார்; எந்த நாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை நெஞ்சே! அம் தண் ஆருர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
நிணம், குடர், தோல், நரம்பு, என்பு, சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்; குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக் குலுங்கினாயே? வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு ஏத்தும் அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சமே!
நீதியால் வாழ்கிலை; நாள் செலா நின்றன, நித்தம் நோய்கள் வாதியா; ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே? சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
பிறவியால் வருவன கேடு உள ஆதலால், பெரிய இன்பத் துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே? மறவல், நீ! மார்க்கமே நண்ணினாய்; தீர்த்த நீர் மல்கு சென்னி அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய்த் தேரைவாய்ச் சிறுபறவை கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று கருதினாயே? முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்தும் முக்கண் அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
ஏறு மால்யானையே, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி, வட்டின் மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே? மாறு இலா வனமுலை மங்கை ஓர் பங்கினர், மதியம் வைத்த ஆறன், ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
என்பினால் கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் புன் புலால் நாறு தோல் போர்த்து, பொல்லாமையால் முகடு கொண்டு முன்பு எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே, அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
தந்தை, தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம், என்னும் பந்தம் நீங்காதவர்க்கு, உய்ந்துபோக்கு இல் எனப் பற்றினாயே? வெந்த நீறு ஆடியார், ஆதியார், சோதியார், வேத கீதர், எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
நெடிய மால் பிரமனும், நீண்டு மண் இடந்து, இன்னம் நேடிக் காணாப் படியனார்; பவளம் போல் உருவனார்; பனி வளர் மலையாள் பாக வடிவனார்; மதி பொதி சடையனார்; மணி அணி கண்டத்து எண்தோள் அடிகள்; ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு அஞ்சல், நெஞ்சே!
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன் நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே.
பருக் கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக நெருக்கி, வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பன் ஊர் தருக் கொள் சோலை சூழ, நீடு மாட மாளிகைக் கொடி அருக்கன் மண்டலத்து அணாவும் அம் தண் ஆரூர் என்பதே.
விண்ட வெள் எருக்கு, அலர்ந்த வன்னி, கொன்றை, மத்தமும், இண்டை, கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர் கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய், அண்டர் அண்டம் ஊடு அறுக்கும் அம் தண் ஆரூர் என்பதே.
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர், காலன் இன் உயிர் மறுத்து மாணிதன் தன் ஆகம் வண்மை செய்த மைந்தன், ஊர் வெறித்து மேதி ஓடி, மூசு வள்ளை வெள்ளை நீள் கொடி அறுத்து மண்டி, ஆவி பாயும் அம் தண் ஆரூர் என்பதே.
அஞ்சும் ஒன்றி, ஆறு வீசி, நீறு பூசி மேனியில், குஞ்சி ஆர வந்தி செய்ய, "அஞ்சல்!" என்னி மன்னும் ஊர் பஞ்சி ஆரும் மெல் அடி, பணைத்த கொங்கை, நுண் இடை, அம்சொலார் அரங்கு எடுக்கும் அம் தண் ஆரூர் என்பதே.
சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை உன்னுவார் மனத்து அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் தெங்கு உலாவு சோலை, நீடு தேன் உலாவு செண்பகம் அங்கு உலாவி, அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே.
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு, அருத்தியோடு உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் துள்ளி வாளை பாய் வயல், சுரும்பு உலாவு நெய்தல்வாய் அள்ளல் நாரை ஆரல் வாரும், அம் தண் ஆரூர் என்பதே.
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர், காமனை மங்க வெங்கணால் விழித்த மங்கைபங்கன், மன்னும் ஊர் தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து, மாவின்மேல் அம் கண் மந்தி முந்தி ஏறும் அம் தண் ஆரூர் என்பதே.
வரைத்தலம்(ம்) எடுத்தவன் முடித்தலம்(ம்) உரத்தொடும் நெரித்தவன், புரத்தை முன்(ன்) எரித்தவன்(ன்), இருந்த ஊர் நிரைத்த மாளிகைத் திருவின் நேர் அனார்கள், வெண் நகை அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே.
இருந்தவன் கிடந்தவன்(ன்), இடந்து விண் பறந்து, மெய் வருந்தியும் அளப்பு ஒணாத வானவன் மகிழ்ந்த ஊர் செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், செழுங் குரா, அரும்பு சோலை வாசம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே.
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம் வெறித்த வேடன், வேலை நஞ்சம் உண்ட கண்டன், மேவும் ஊர் மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செநெல் அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே.
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை, நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே.