பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
முத்தன், மிகு மூஇலைநல்வேலன், விரி நூலன், அத்தன், எமை ஆள் உடைய அண்ணல், இடம் என்பர் மைத் தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச, பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.
கோடலொடு கோங்குஅவை குலாவு முடிதன்மேல் ஆடுஅரவம் வைத்த பெருமானது இடம் என்பர் மாடம் மலி சூளிகையில் ஏறி, மடவார்கள் பாடலொலி செய்ய, மலிகின்ற பழுவூரே.
வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய ஒருத்தர், புரிநூலர், இடம் என்பர் வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர், பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே.
எண்ணும், ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார் கண்ணும் முதல் ஆய கடவுட்கு இடம் அது என்பர் மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்தி, பண்ணின் ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும் நாதன், நமை ஆள் உடைய நம்பன், இடம் என்பர் வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன் பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.
மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி, பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.
மந்தணம் இருந்து புரி மா மடிதன் வேள்வி சிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர் பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.
உரக் கடல்விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்று அரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு, பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட, அன்று தழல் ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர் ஒன்றும் இரு மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள் மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.
மொட்டை அமண் ஆதர், துகில் மூடு விரி தேரர், முட்டைகள் மொழிந்த முனிவான்தன் இடம் என்பர் மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம், பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே.
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும் பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச் சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி, வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.