பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்! உழை ஆர் கரவா! உமையாள்கணவா! விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம் அழகா! எனும் ஆயிழையாள் அவளே
கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே! மலை ஆர் சிலையா வளைவித்தவனே! விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்! நிலையா அருளாய்! எனும் நேரிழையே.
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்! பாலோடு நெய் ஆடிய பால்வணனே! வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்! ஆல் ஆர் நிழலாய்! எனும் ஆயிழையே.
சுறவக் கொடி கொண்டவன் நீறு அது ஆய் உற, நெற்றி விழித்த எம் உத்தமனே! விறல் மிக்க கரிக்கு அருள்செய்தவனே! அறம் மிக்கது எனும் ஆயிழையே.
செங்கண் பெயர் கொண்டவன் செம்பியர்கோன் அம் கண் கருணை பெரிது ஆயவனே! வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்! அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.
குன்றே அமர்வாய்! கொலை ஆர் புலியின் தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்! வென்றாய், புரம்மூன்றை! வெண்நாவலுளே நின்றாய், அருளாய்! எனும் நேரிழையே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை
மலை அன்று எடுத்த அரக்கன் முடிதோள தொலைய விரல் ஊன்றிய தூ மழுவா! விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்! அலசாமல் நல்காய்! எனும் ஆயிழையே.
திரு ஆர்தரு, நாரணன், நான்முகனும், அருவா, வெருவா, அழல் ஆய் நிமிர்ந்தாய்! விரை ஆரும் வெண்நாவலுள் மேவிய எம் அரவா! எனும் ஆயிழையாள் அவளே.
புத்தர்பலரோடு அமண்பொய்த்தவர்கள் ஒத்த உரை சொலிவை ஓரகிலார்; மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல் உளாய்! அத்தா! அருளாய்! எனும் ஆயிழையே.
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனை, கண் ஆர் கமழ் காழியர்தம் தலைவன், பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார் விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.