பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவலஞ்சுழி
வ.எண் பாடல்
1

விண்டு எலாம் மலர விரை நாறு தண் தேன் விம்மி,
வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்
பண்டுஎலாம் பலி தேர்ந்து ஒலிபாடல் பயின்றதே?

2

பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்
வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழி,
மூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர்
ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?

3

கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய்
வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,
சுண்ணவெண்பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர்
விண்ணவர் தொழ, வெண்தலையில் பலி கொண்டதே?

4

கோடுஎலாம் நிறையக் குவளை மலரும் குழி
மாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,
சேடுஎலாம் உடையீர்! சிறுமான்மறியீர்! சொலீர்
நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?

5

கொல்லை வேனல் புனத்தின் குரு மா மணி கொண்டு
போய்,
வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,
முல்லைவெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்
சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?

6

பூசம் நீர் பொழியும் புனல்பொன்னியில் பன்மலர்
வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
தேசம் நீர்; திரு நீர்; சிறுமான்மறியீர்! சொலீர்
ஏச, வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?

7

கந்தமாமலர்ச் சந்தொடு கார் அகிலும் தழீஇ,
வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
அந்தம் நீர், முதல் நீர், நடு ஆம் அடிகேள்! சொலீர்
பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?

8

தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,
கான் உற்ற களிற்றின் உரி போர்க்க வல்லீர்! சொலீர்
ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?

9

தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பன்மலர்
வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,
ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்
சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?

10

உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன் அருள
வரம் மனும் பெறல் ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்
பிரமனும் திருமாலும் அளப்பரியீர்! சொலீர்
சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?

11

வீடும் ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்
வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழி
நாடி, ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை
பாடு ஞானம் வல்லார், அடி சேர்வது ஞானமே

திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவலஞ்சுழி
வ.எண் பாடல்
1

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே! இருங்கடல்
வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயன் இடை,
முழுமணித்தரளங்கள்
மன்னு காவிரி சூழ் திரு வலஞ்சுழி வாணனை, வாய் ஆரப்
பன்னி, ஆதரித்து ஏத்தியும் பாடியும், வழிபடும் அதனாலே.

2

விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு
நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,
உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம்
ஆகக்
கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது
இருந்தமையாலே.

3

திருந்தலார் புரம் தீ எழச் செறுவன; இறலின் கண்
அடியாரைப்
பரிந்து காப்பன; பத்தியில் வருவன; மத்தம் ஆம்
பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன; மந்திரம் ஆவன வலஞ்சுழி இடம் ஆக
இருந்த நாயகன், இமையவர் ஏத்திய, இணை அடித்தலம்
தானே.

4

கறை கொள் கண்டத்தர்; காய்கதிர் நிறத்தினர்; அறத்திறம்
முனிவர்க்கு அன்று
இறைவர் ஆல் இடை நீழலில் இருந்து உகந்து இனிது
அருள் பெருமானார்;
மறைகள் ஓதுவர்; வருபுனல் வலஞ்சுழி இடம் மகிழ்ந்து,
அருங்கானத்து,
அறை கழல் சிலம்பு ஆர்க்க, நின்று ஆடிய அற்புதம்
அறியோமே!

5

மண்ணர்; நீரர்; விண்; காற்றினர்; ஆற்றல் ஆம் எரி உரு;
ஒருபாகம்
பெண்ணர்; ஆண் எனத் தெரிவு அரு வடிவினர்;
பெருங்கடல் பவளம் போல்
வண்ணர்; ஆகிலும், வலஞ்சுழி பிரிகிலார்; பரிபவர் மனம்
புக்க
எண்ணர்; ஆகிலும், எனைப் பல இயம்புவர், இணை அடி
தொழுவாரே.

6

ஒருவரால் உவமிப்பதை அரியது ஓர் மேனியர்; மடமாதர்
இருவர் ஆதரிப்பார்; பலபூதமும் பேய்களும் அடையாளம்;
அருவராதது ஒர் வெண்தலை கைப் பிடித்து, அகம்தொறும்
பலிக்கு என்று
வருவரேல், அவர் வலஞ்சுழி அடிகளே; வரி வளை
கவர்ந்தாரே!

7

குன்றியூர், குடமூக்கு இடம், வலம்புரம், குலவிய
நெய்த்தானம்,
என்று இவ் ஊர்கள் இ(ல்)லோம் என்றும் இயம்புவர்;
இமையவர் பணி கேட்பார்;
அன்றி, ஊர் தமக்கு உள்ளன அறிகிலோம்; வலஞ்சுழி
அரனார்பால்
சென்று, அ(வ்) ஊர்தனில் தலைப்படல் ஆம் என்று
சேயிழை தளர்வு ஆமே.

8

குயிலின் நேர் மொழிக் கொடியிடை வெரு உற, குல
வரைப் பரப்பு ஆய
கயிலையைப் பிடித்து எடுத்தவன் கதிர் முடி தோள்
இருபதும் ஊன்றி,
மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன், வலஞ்சுழி
எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்; அல்லவர் காணாரே.

9

அழல் அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும், அரவு
அணைத் துயின்றானும்,
கழலும் சென்னியும் காண்பு அரிது ஆயவர்; மாண்பு அமர்
தடக்கையில்
மழலை வீணையர்; மகிழ் திரு வலஞ்சுழி வலம்கொடு
பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள்
களைவாரே.

10

அறிவு இலாத வன்சமணர்கள், சாக்கியர், தவம் புரிந்து
அவம் செய்வார்
நெறி அலாதன கூறுவர்; மற்று அவை தேறன் மின்! மாறா
நீர்
மறி உலாம் திரைக் காவிரி வலஞ்சுழி மருவிய
பெருமானைப்
பிறிவு இலாதவர் பெறு கதி பேசிடில், அளவு அறுப்பு
ஒண்ணாதே.

11

மாது ஒர் கூறனை, வலஞ்சுழி மருவிய மருந்தினை, வயல்
காழி
நாதன் வேதியன், ஞானசம்பந்தன் வாய் நவிற்றிய
தமிழ்மாலை
ஆதரித்து, இசை கற்று வல்லார், சொலக் கேட்டு உகந்தவர்
தம்மை
வாதியா வினை; மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து
அடையாவே.