பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்! பயப்பு ஊர, சங்கு ஆட்டம் தவிர்த்து, என்னைத் தவிரா நோய் தந்தானே செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய, வெங்காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே.
பொன் அம் பூங் கழிக் கானல் புணர் துணையோடு உடன் வாழும் அன்னங்காள்! அன்றில்காள்! அகன்றும் போய் வருவீர்காள் கல்-நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய இன் அமுதன் இணை அடிக்கீழ் எனது அல்லல் உரையீரே!
குட்டத்தும், குழிக் கரையும், குளிர் பொய்கைத் தடத்து அகத்தும், இட்டத்தால் இரை தேரும், இருஞ் சிறகின் மட நாராய்! சிட்டன் சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய வட்ட வார்சடையார்க்கு என் வருத்தம், சென்று, உரையாயே!
கான் அருகும், வயல் அருகும், கழி அருகும், கடல் அருகும், மீன் இரிய, வருபுனலில் இரை தேர் வண் மடநாராய்! தேன் அமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம், சென்று, உரையாயே!
ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து, அகன் கழனிச் சிறகு உலர்த்தும், பாரல் வாய்ச் சிறு குருகே! பயில் தூவி மடநாராய்! சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை, சென்று, உரையீரே!
குறைக் கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே? குளிர்பொய்கைத் துறைக் கெண்டை கவர் குருகே! துணை பிரியா மடநாராய்! கறைக்கண்டன், பிறைச்சென்னி, கணபதீச்சுரம் மேய சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
கரு அடிய பசுங் கால் வெண்குருகே! ஒண் கழி நாராய்! “ஒரு அடியாள் இரந்தாள்” என்று, ஒரு நாள் சென்று, உரையீரே! செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய திருவடி தன் திரு அருளே பெறல் ஆமோ, திறத்தவர்க்கே?
கூர் ஆரல் இரை தேர்ந்து, குளம் உலவி, வயல் வாழும் தாராவே! மடநாராய்! தமியேற்கு ஒன்று உரையீரே! சீராளன், சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய பேராளன், பெருமான் தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே?
நறப் பொலி பூங் கழிக் கானல் நவில் குருகே! உலகு எல்லாம் அறப் பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே? சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய பிறப்பு இலி பேர் பிதற்றி நின்று, இழக்கோ, என் பெரு நலமே?
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
செந்தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய, வெந்த நீறு அணி மார்பன், சிறுத்தொண்டன் அவன் வேண்ட, அம் தண் பூங் கலிக் காழி அடிகளையே அடி பரவும் சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே.