பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காலை ஆர் வண்டு இனம் கிண்டிய, கார் உறும், சோலை ஆர் பைங்கிளி சொல் பொருள் பயிலவே, வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே.
கறை அணி மிடறு உடைக் கண்ணுதல், நண்ணிய பிறை அணி செஞ்சடைப் பிஞ்ஞகன், பேணும் ஊர் துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே, மறை அணி நாவினான் மா மழபாடியே.
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும், செந்தமிழ்க் கீதமும், சீரினால் வளர்தர, பந்து அணை மெல்விரலாளொடும் பயில்வு இடம் மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே.
அத்தியின் உரிதனை அழகு உறப் போர்த்தவன்; முத்தி ஆய் மூவரில் முதல்வனாய் நின்றவன்; பத்தியால் பாடிட, பரிந்து அவர்க்கு அருள்செயும் அத்தனார்; உறைவு இடம் அணி மழபாடியே.
கங்கை ஆர் சடை இடைக் கதிர் மதி அணிந்தவன், வெங் கண் வாள் அரவு உடை வேதியன், தீது இலாச் செங்கயல் கண் உமையாளொடும் சேர்வு இடம் மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே.
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண வரும் காலனார் உயிர் செகக் காலினால் சாடினான், சேலின் ஆர் கண்ணினாள் தன்னொடும் சேர்வு இடம் மாலினார் வழிபடும் மா மழபாடியே.
விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து ஏத்தவே, எண் இலார் முப்புரம் எரியுண, நகைசெய்தார் கண்ணினால் காமனைக் கனல் எழக் காய்ந்த எம் அண்ணலார்; உறைவு இடம் அணி மழபாடியே.
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன சிரத்தினை ஊன்றலும், சிவன் அடி சரண் எனா, இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும், வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே.
ஏடு உலாம் மலர்மிசை அயன், எழில் மாலும் ஆய், நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவு இடம் பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ, பைம்பொழில் மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே.
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு சாக்கியர் நெறி பிடித்து, அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்மின்! பொறி பிடித்த(அ)ரவு இனம் பூண் எனக் கொண்டு, மாந் மறி பிடித்தான் இடம் மா மழபாடியே.
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும் சீலத்தான், மேவிய திரு மழபாடியை ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே.
அங்கை ஆர் அழலன்(ன்), அழகு ஆர் சடைக் கங்கையான், கடவுள்(ள்), இடம் மேவிய மங்கையான், உறையும் மழபாடியைத் தம் கையால்-தொழுவார் தகவாளரே.
விதியும் ஆம்; விளைவு ஆம்; ஒளி ஆர்ந்தது ஓர் கதியும் ஆம்; கசிவு ஆம்; வசி ஆற்றம் ஆம்; மதியும் ஆம்; வலி ஆம் மழபாடி நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே.
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்- குழுவினான், குலவும் கையில் ஏந்திய மழுவினான், உறையும் மழபாடியைத் தொழுமின், நும் துயர் ஆனவை தீரவே!
கலையினான், மறையான், கதி ஆகிய மலையினான், மருவார் புரம் மூன்று எய்த சிலையினான், சேர் திரு மழபாடியைத் தலையினால் வணங்க, தவம் ஆகுமே.
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு கல்வி ஆய கருத்தன், உருத்திரன், செல்வன், மேய திரு மழபாடியைப் புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே.
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்; ஆடினான், எரிகான் இடை மாநடம்; பாடினார் இசை மா மழபாடியை நாடினார்க்கு இல்லை, நல்குரவு ஆனவே.
மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகம் ஆய் மன்னினான் உறை மா மழபாடியைப் பன்னினார், இசையால் வழிபாடு செய்து உன்னினார், வினை ஆயின ஓயுமே.
தென் இலங்கையர் மன்னன் செழு வரை- தன்னில் அங்க அடர்த்து அருள் செய்தவன் மன் இலங்கிய மா மழபாடியை உன்னில், அங்க உறுபிணி இல்லையே.
திருவின் நாயகனும், செழுந்தாமரை மருவினானும், தொழ, தழல் மாண்பு அமர் உருவினான் உறையும் மழபாடியைப் பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர் வலிய சொல்லினும், மா மழபாடியு ஒலிசெய் வார்கழலான் திறம் உள்கவே, மெலியும், நம் உடல் மேல் வினை ஆனவே.
மந்தம் உந்து பொழில் மழபாடி எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான், கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம்- பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை, பாவமே.