பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே, மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும் குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா, இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து, அயலே பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா, ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே.
மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட அன்னம் மல்கும், பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில் வாய், குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா, இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ, அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு ஆர் கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா, எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.
வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப் பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்; கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா, இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே.
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே, தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும் குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா, இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம் இறையே.
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச் சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்; குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா, இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே.
நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப் படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்; கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா, இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே.
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா, ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு அமணர் நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான், கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா, ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம் இறையே.
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்- நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே.