பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்; பூண நூலர் சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர்; நஞ்சு அழுந்து கண்டர்; கீதத்தின் பொலிந்த ஓசைக் கேள்வியர்; வேள்வியாள வேதத்தின் பொருளர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
காலையின் கதிர்செய் மேனி, கங்குலின் கறுத்த கண்டர் மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர்; மதுவும் பாலும் ஆலையில் பாகும் போல அண்ணித் திட்டு, -அடியார்க்கு,-என்றும் வேலையின் அமுதர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
வரும் தினம், நெருநல், இன்று ஆய், வழங்கின நாளர்; ஆல்கீழ் இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர்; இருவரோடும் பொருந்தினர்; பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் விருந்தினர்-திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே.
நிலை இலா ஊர் மூன்று ஒன்ற-நெருப்பு, -அரி காற்று அம்பு ஆக, சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர்; தேவர் தங்கள் தலையினால்-தரித்த என்பும், தலைமயிர் வடமும், பூண்ட விலை இலா வேடர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
மறை இடைப் பொருளர்; மொட்டின் மலர் வழி வாசத் தேனர் கறவு இடைப் பாலின் நெய்யர்; கரும்பினில் கட்டியாளா பிறை இடைப் பாம்பு கொன்றைப் பிணையல் சேர் சடையுள் நீரர் விறகு இடைத் தீயர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
எண் அகத்து இல்லை அல்லர்; உளர் அல்லர்; இமவான் பெற்ற பெண் அகத்தர்; ஐயர்; காற்றில் பெரு வலி இருவர் ஆகி, மண் அகத்து ஐவர்; நீரில் நால்வர்; தீ அதனில் மூவர் விண் அகத்து ஒருவர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
சந்து அணி கொங்கையாள் ஓர் பங்கினர்; சாமவேதர் எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர்; அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் வெந்தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு(வ்) ஏற்றுழி, ஒரு நாள் ஒன்று குறைய, கண் நிறைய இட்ட ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் வீற்றிருந்து அளிப்பர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்வு இடம்; சென்று கூடப் பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர்; இறப்பு இலாளா முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீலகண்டர் வித்தினில் முளையர்-வீழிமிழலையுள் விகிர்தனாரே.
தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி தடை நிலாது பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண் ஆய் நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ, தம் வாள விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே.
வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு அயலே தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திருக்கொன்றை சென்னி வைத்தீர் மான் பெட்டை நோக்கி மணாளீர்! மணி நீர் மிழலை உள்ள நான் சட்ட உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர்! அண்டம் எண்திசையும் பந்தமும் வீடும் பரப்புகின்றீர்! பசு ஏற்று உகந்தீர் வெந்தழல் ஓம்பும் மிழலை உள்ளீர்!-என்னைத் தென்திசைக்கே உந்திடும்போது மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
அலைக்கின்ற நீர், நிலம், காற்று, அனல் அம்பரம், ஆகி நின்றீர் கலைக்கன்று சேரும் கரத்தீர்! கலைப்பொருள் ஆகி நின்றீர் விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் குலைக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
தீத் தொழிலான் தலை தீயில் இட்டு, செய்த வேள்வி செற்றீர் பேய்த்தொழிலாட்டியைப் பெற்று உடையீர்! பிடித்துத் திரியும் வேய்த் தொழிலாளர் மிழலை உள்ளீர்! விக்கி அஞ்சு எழுத்தும் ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
தோள் பட்ட நாகமும், சூலமும், சுத்தியும், பத்திமையால் மேற்பட்ட அந்தணர் வீழியும், என்னையும் வேறு உடையீர் நாள் பட்டு வந்து பிறந்தேன், இறக்க, நமன் தமர்தம் கோள்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
கண்டியில் பட்ட கழுத்து உடையீர்! கரிகாட்டில் இட்ட பண்டியில் பட்ட பரிகலத்தீர்! பதிவீழி கொண்டீர் உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில்,-உம்மை, ஐவர் கொண்டியில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர்! தூய வெள் எருது ஒன்று ஏற்றம் கொண்டீர்! எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் சீற்றம் கொண்டு என்மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெங் கூற்றம் கண்டு உம்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடிச் சொக்கம் பயின்றீர் பழிப்பட்ட பாம்பு அரைப் பற்று உடையீர்! படர் தீப் பருக விழிப்பட்ட காமனை வீட்டீர்! மிழலை உள்ளீர்!-பிறவிச் சுழிப்பட்டு நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
பிள்ளையின் பட்ட பிறைமுடியீர்! மறை ஓத வல்லீர் வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர்! விரிநீர் மிழலை உள்ள நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்தம் கொள்ளையில் பட்டு மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!
கறுக்கொண்டு அரக்கன் கயிலையைப் பற்றிய கையும் மெய்யும் நெறுக்கென்று இறச் செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் வெறிக் கொன்றைமாலை முடியீர்! விரிநீர் மிழலை உள்ள இறக்கின்று நும்மை மறக்கினும், என்னைக் குறிக்கொண்மினே!