பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி, கண்ணில் நின்ற மணி ஒக்கும், பெண் காட்டிப் பிறைச் சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார், ஒள்ளிய(க்) கணம் சூழ் உமை பங்கனார், வெள்ளியன், கரியன், பசு ஏறிய தெள்ளியன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!
ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே, வான் நோக்கும் வழி ஆவது நின்மினோ! தான் நோக்கும் தன் அடியவர் நாவினில்- தேன் நோக்கும் திரு வெண்காடு அடை, நெஞ்சே!
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின் உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே; பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம் திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!
பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன் உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள் கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால் செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!
கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்; வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்; சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்- காடனார்; அடியே அடை, நெஞ்சமே!
தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்; புரித்த புன் சடையான்; கயவர் புரம் எரித்தவன்; மறைநான்கினோடு ஆறு அங்கம் விரித்தவன்(ன்), உறை வெண்காடு அடை, நெஞ்சே!
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள் சிட்டன், ஆதிழு என்று(ச்) சிந்தை செய்யவே, நட்டமூர்த்தி-ஞானச்சுடர் ஆய் நின்ற அட்டமூர்த்திதன்-வெண்காடு அடை, நெஞ்சே!
ஏன வேடத்தினானும் பிரமனும் தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும் கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!
பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர், சேலை ஆடிய கண் உமை பங்கனார், வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு மாலை ஆவது மாண்டவர் அங்கமே.
இரா வணம் செய, மா மதி பற்று அவ், ஐ- யிரா வணம்(ம்) உடையான் தனை உள்குமின்! இராவணன் தனை ஊன்றி அருள்செய்த இராவணன் திரு வெண்காடு அடைமினே!