பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திரு வீழிமிழலை
வ.எண் பாடல்
1

நம்பினார்க்கு அருள் செய்யும் அந்தணர் நால்மறைக்கு இடம் ஆய வேள்வியுள்
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை,
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும்(ம்) உடனே உறைவு இடம்
அம் பொன் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

2

“விடம் கொள் மா மிடற்றீர்! வெள்ளைச் சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர்!” என்று
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை,
மடங்கல் பூண்ட விமானம் மண்மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழி கொண்டீர்-அடியேற்கும் அருளுதிரே!

3

ஊனை உற்று உயிர் ஆயினீர்; ஒளி மூன்றும் ஆய், தெளி நீரொடு ஆன் அஞ்சின்
தேனை ஆட்டு உகந்தீர்! செழு மாடத் திரு மிழலை,
மானை மேவிய கையினீர்! மழு ஏந்தினீர்! மங்கை பாகத்தீர்! விண்ணில்
ஆன வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

4

“பந்தம், வீடு, இவை பண்ணினீர்; படிறீர்; மதிப்பிதிர்க் கண்ணியீர்” என்று
சிந்தை செய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை,
வந்து நாடகம் வான நாடியர் ஆட, மால் அயன் ஏத்த, நாள்தொறும்
அம் தண் வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

5

புரிசை மூன்றையும் பொன்றக் குன்றவில் ஏந்தி; வேதப்புரவித் தேர்மிசைத்
திரிசெய்-நால்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை,
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆடப் பரிந்து நல்கினீர்!-
அரிய வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

6

எறிந்த சண்டி, இடந்த கண்ணப்பன், ஏத்து பத்தர் கட்கு ஏற்றம் நல்கினீர்!
செறிந்த பூம்பொழில்-தேன் துளி வீசும் திரு மிழலை,
நிறைந்த அந்தணர் நித்தம்-நாள்தொறும் நேசத்தால் உமைப் பூசிக்கும்(ம்) இடம்
அறிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

7

பணிந்த பார்த்தன், பகீரதன், பல பத்தர் சித்தர்க்குப் பண்டு நல்கினீர்!
திணிந்த மாடம்தொறும் செல்வம் மல்கு திரு மிழலை,
தணிந்த அந்தணர் சந்தி நாள்தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை
அணிந்து, வீழி கொண்டீர்!-அடியேற்கும் அருளுதிரே!

8

பரந்த பாரிடம் ஊர் இடைப் பலி பற்றிப் பாத்து உணும் சுற்றம் ஆயினீர்;
தெரிந்த நால்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை
இருந்து, நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்;
அருந் தண் வீழி கொண்டீர்!;-அடியேற்கும் அருளுதிரே!

9

“தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக!” என்று உமை கேட்க, சொல்லினீர்;
“தீயர், ஆக்கு உலையாளர், செழு மாடத் திரு மிழலை
மேய நீர் பலி ஏற்றது என்?” என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழி கொண்டீர்;-அடியேற்கும் அருளுதிரே!

10

“வேத வேதியர், வேட நீதியர் ஓதுவார், விரி நீர் மிழலையுள்
ஆதி வீழி கொண்டீர்; அடியேற்கும் அருளுக!” என்று
நாதகீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன்தொண்டன்நல்-தமிழ்
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே.