பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருநின்றியூர்
வ.எண் பாடல்
1

அற்றவனார், அடியார் தமக்கு; ஆயிழை பங்கினர் ஆம்;
பற்றவனார்; “எம் பராபரர்” என்று பலர் விரும்பும்
கொற்றவனார்; குறுகாதவர் ஊர் நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

2

வாசத்தின் ஆர் மலர்க் கொன்றை உள்ளார்; வடிவு ஆர்ந்த நீறு
பூசத்தினார்; புகலி(ந்)நகர் போற்றும் எம் புண்ணியத்தார்;
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார்; நெடுமால் கடல் சூழ்
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

3

அம் கையில் மூ இலை வேலர்; அமரர் அடி பரவ,
சங்கையை நீங்க, அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்;
மங்கை ஒர்பாகர்; மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே .

4

ஆறு உகந்தார், அங்கம்; நால்மறையார்; எங்கும் ஆகி அடல்
ஏறு உகந்தார், இசை ஏழ் உகந்தார்; முடிக் கங்கை தன்னை
வேறு உகந்தார்; விரிநூல் உகந்தார்; பரி சாந்தம் அதா
நீறு உகந்தார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

5

வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார்; நறு நெய் தயிர் பால்
அஞ்சும் கொண்டு ஆடிய வேட்கையினார்; அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார்; தமக்கு என்றும் இருக்கை, சரண் அடைந்தார்
நெஞ்சம், கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

6

ஆர்த்தவர், ஆடு அரவம்(ம்) அரைமேல்; புலி ஈர் உரிவை
போர்த்தவர்; ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகலப்
பார்த்தவர்; இன் உயிர், பார், படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

7

தலை இடை ஆர் பலி சென்று அகம் தோறும் திரிந்த செல்வர்;
மலை உடையாள் ஒரு பாகம் வைத்தார்; கல்-துதைந்த நன்நீர்-
அலை உடையார்; சடை எட்டும் சுழல, அரு நடம் செய்
நிலை உடையார்; உறையும்(ம்) இடம் ஆம் திரு நின்றியூரே .

8

எட்டு உகந்தார், திசை; ஏழ் உகந்தார், எழுத்து; ஆறும் அன்பர்
இட்டு உகந்து ஆர் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர்; முன்நாள்
பட்டு உகும் பார் இடைக் காலனைக் காய்ந்து, பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே .

9

காலமும் ஞாயிறும் ஆகி நின்றார்; கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார்; அடி போற்று இசைப்ப,
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க,
நீலநஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே .

10

வாயார், மனத்தால் நினைக்குமவருக்கு; அருந்தவத்தில்-
தூயார்; சுடுபொடி ஆடிய மேனியர்; வானில் என்றும்
மேயார்; விடை உகந்து ஏறிய வித்தகர்; பேர்ந்தவர்க்குச்
சேயார்; அடியார்க்கு அணியவர்; ஊர் திரு நின்றியூரே .

11

சேரும் புகழ்த் தொண்டர் செய்கை அறாத் திரு நின்றியூரில்
சீரும் சிவகதி ஆய் இருந்தானைத் திரு நாவல் ஆ-
ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்,
பாரும் விசும்பும் தொழ, பரமன்(ன்) அடி கூடுவரே .

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருநின்றியூர்
வ.எண் பாடல்
1

திருவும், வண்மையும், திண் திறல் அரசும், சிலந்தியார் செய்த செய் பணிகண்டு-
மருவு கோச்செங்கணான் தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன்-
பெருகு பொன்னி வந்து உந்து பல் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணி,
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றி, திரட்டும் தென் திரு நின்றியூரானே! .

2

அணி கொள் ஆடை, அம் பூண், மணி மாலை, அமுது செய்த அமுதம், பெறு சண்டி;
இணை கொள் ஏழ்-எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திரு நாவினுக்கு அரையன்;
கணை கொள் கண்ணப்பன்; என்று இவர் பெற்ற காதல் இன் அருள் ஆதரித்து அடைந்தேன்-
திணை கொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

3

மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன் மணிக் கலசங்கள் ஏந்தி, ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப,
பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்-
சித்தர், வானவர், தானவர், வணங்கும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

4

இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து, தன் முலைக் கலசங்கள் ஏந்தி,
சுரபி பால் சொரிந்து, ஆட்டி, நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம் படக் கேட்டு,
பரவி உள்கி, வன் பாசத்தை அறுத்து, பரம! வந்து, நுன் பாதத்தை அடைந்தேன்-
நிரவி நித்திலம், அத் தகு செம்பொன், அளிக்கும் தென் திரு நின்றியூரானே! .

5

வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து, “வானநாடு நீ ஆள்க!” என அருளி,
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச்
சிந்து மா மணி அணி திருப் பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்-
செந் தண் மா மலர்த் திருமகள் மருவும் செல்வத் தென் திரு நின்றியூரானே! .

6

காது பொத்தர் ஐக் கின்னரர், உழுவை, கடிக்கும் பன்னகம், பிடிப்ப(அ)ரும் சீயம்,
கோது இல் மா தவர் குழு உடன், கேட்பக் கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர;
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு, நின் இணை அடி அடைந்தேன்-
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே! .

7

கோடு நான்கு உடைக் குஞ்சரம் குலுங்க, நலம் கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே
பீடு விண் மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன்கழல் அடைந்தேன்-
பேடை மஞ்ஞையும், பிணைகளின் கன்றும், பிள்ளைக்கிள்ளையும், எனப் பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே! .