பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / சத்திநி பாதம் - மந்தரம்
வ.எண் பாடல்
1

இருட்டு அறை மூலை இருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீங்கிக் குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.

2

தீம் புலன் ஆன திசை அது சிந்திக்கில்
ஆம் புலன் ஆய அறிவார்க்கு அமுதாய் நிற்கும்
தேம் புலன் ஆன தெளிவு அறிவார்கட்கு
ஓம் புலன் ஆடிய கொல்லையும் ஆமே.

3

இருள் நீக்கி எண் இல் பிறவி கடத்தி
அருள் நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள் நீங்கா வானவர் கோன் ஒடும் கூடிப்
பொருள் நீங்கா இன்பம் புலம் பயில் தானே.

4

இருள் சூழ் அறையில் இருந்தது நாடில்
பொருள் சூழ் விளக்கு அது புக்கு எரிந்தால் போன்று
மருள் சூழ் மயக்கத்து மா மலர் நந்தி
அருள் சூழ் இறைவனும் அம்மையும் ஆமே.

5

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினை அறுத்து இன்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம் பல காட்டி
அருள் திகழ் ஞானம் அது புரிந்தானே.

6

கன்னித் துறை படிந்து ஆடிய ஆடவர்
கன்னித் துறை படிந்து ஆடும் கருத்து இலர்
கன்னித் துறை படிந்து ஆடும் கருத்து உண்டேல்
பின்னைப் பிறவி பிறிது இல்லை தானே.

7

செய்யன் கரியன் வெளியன் நல் பச்சையன்
எய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
மை வென்று அகன்ற படுகரி போர்த்த வெம்
கையன் இவன் என்று காதல் செய்வீரே.

8

எய்திய காலங்கள் எத்தனை ஆயினும்
தையலும் தானும் தனி நாயகம் என்பர்
வைகலும் தன்னை வணங்கும் அவர் கட்குக்
கையில் கருமம் செய் காட்டு அது ஆமே.

9

கண்டு கொண்டோம் இரண்டும் தொடர்ந்து ஆங்கு ஒளி
பண்டு பண்டு ஓயும் பரமன் பரம்சுடர்
வண்டு கொண்டு ஆடும் மலர் வார் சடை அண்ணல்
நின்று கண்டார்க்கு இருள் நீக்கி நின்றானே.

10

அண்ணிக்கும் பெண் பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழ் ஏழ் பிறவி உணர்விக்கும்
உள் நிற்பது எல்லாம் ஒழிய முதல்வனைக்
கண் உற்று நின்ற கனி அது ஆகுமே.

11

பிறப்பை அறுக்கும் பெரும்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப் பெண் குவி முலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்ய நின்றார்க்கே.

12

தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங் கமழ் கோதைப் புரிகுழலாள் ஒடும்
ஆங்கு அது சேரும் அறிவு உடையார் கட்குத்
தூங்கு ஒளி நீலம் தொடர்தலும் ஆமே.

13

நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகிலும் பல்மலர் தூவிப் பணிவன்
அணுகியது ஒன்று அறியாத ஒருவன்
அணுகும் உலகு எங்கும் ஆவியும் ஆமே.

14

இருவினை நேர் ஒப்பு இல் இன் அருள் சத்தி
குருஎன வந்து குணம் பல நீக்கித்
தரும் எனும் ஞானத்தால் தன் செயல் அற்றால்
திரி மலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே.

15

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறும்
சாலை விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன் என் உள் புகுந்து
ஊனை விளக்கி உடன் இருந்தானே.