பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால் காதலும் வேண்டாம் மெய்க் காயம் இடம் கண்டால் சாதலும் வேண்டாம் சமாதிகை கூடினால் போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.
கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால் சத்தமும் வேண்டாம் சமாதிகை கூடினால் சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றல் ஆல் சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே.
விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார் விளைவு அறிவார் பண்டை மெய் உரை செய்வார் விளைவு அறிவார் பண்டை மெய் அறம் செய்வார் விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே.
கூடித் தவம் செய்து கண்டேன் குரை கழல் தேடித் தவம் செய்து கண்டேன் சிவ கதி வாடித் தவம் செய்வதே தவம் இவை களைந்து ஊடில் பல உலகோர் எத்தவரே.
மனத்து உறை மா கடல் ஏழும் கை நீந்தித் தவத்து இடையாளர் தம் சார்வத்து வந்தார் பவத்து இடையாளர் அவர் பணி கேட்கின் முகத்து இடை நந்தியை முந்தலும் ஆமே.
மனத்து இடை நின்ற மதிவாள் உருவி இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்த்துப் புனத்து இடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்து இடை ஆறொளி தன் ஒளி ஆமே
ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம் சத்தான செய்வது தான் தவம் தானே.
இலை தொட்டுப் பூப் பறித்து எந்தைக்கு என்று எண்ணி மலர் தொட்டுக் கொண்டேன் வரும் புனல் காணேன் தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்தது என் உள்ளம் தலை தொட்டுக் கண்டேன் தவம் கண்ட வாறே.
படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும் இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் உடர் அடை செய்வது ஒரு மனத்து ஆமே.
ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சிப் போய் ஈற்றுக் கரடிக்கு எதிர்ப்பட்ட தன் ஒக்கும் நோற்றுத் தவம் செய்யார் நூல் அறியாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.
பழுக் கின்ற வாறும் பழம் உண்ணும் ஆறும் குழக் கன்று துள்ளியக் கோணியைப் பல்கால் குழக் கன்று கொட்டிலில் கட்டவல்லார்க்கு உள் இழுக் காது நெஞ்சத்து இட ஒன்றும் ஆமே.
சித்தம் சிவம் ஆகச் செய் தவம் வேண்டா ஆல் சித்தம் சிவ ஆனந்தம் சேர்ந்தோர் உறவு உண்டால் சித்தம் சிவம் ஆகவே சித்தி முத்தி ஆம் சித்தம் சிவம் ஆதல் செய்தவப் பேறே.