பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காயப் பை ஒன்று சரக்குப் பல உள மாயப் பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு காயப் பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் மாயப் பை மண்ணா மயங்கிய வாறே.
அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லுங்கால் சத்த பரிச ரூப ரச கந்தம் புத்திமான் ஆங்காரம் புரி அட்ட காயமே.
எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங் களும் கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே கட்டி அவிழ்த்திடும் கண் நுதல் காணுமே.
இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழ் ஆம் உபாதி உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே.
ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கு அவர் நின்றது யாரே அறிவார் அறுபத்து எட்டு ஆக்கையை யாரே அறிவார் அடிக் காவல் ஆனதே.
எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்கு உள் கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில் புண் கால் அறுபத்து எட்டு ஆக்கை புணர்க்கின்ற நண் பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே.
உடம்புக்கும் நாலுக்கும் உயிர் ஆய சீவன் ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம் கடம்தொறு நின்ற கணக்கு அது காட்டி அடங்கியே அற்றது ஆர் அறிவாரே.
ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால் தேறிய மூ ஆறும் சிக் என்று இருந்திடும் கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே.
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லி அம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.
காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் சேய இடம் அண்மை செல்லவும் வல்லது காயத் துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே.
நாகம் உடல் உரி போலும் நல் அண்டசம் ஆக நனாவில் கனா மறந்து அல்லது போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே
உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடும் சூக்கம் காரண மாச் செலப் பண்டு தொடரப் பரகாய யோகி போல் பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே.
தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன் ஆன அவை மாற்றிப் பரமத்து அடைந்திடும் ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே.
ஞானிக்குக் காயம் சிவமே தனுவாம் அஞ் ஞானிக்குக் காயம் உடம்பே அது ஆகும் மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்குக் காயம் முப் பாழ் கெட்ட முத்தியே.
விஞ்ஞானத் தோர்க்கு ஆணவமே மிகுதனு எஞ்ஞானத் தோர்க்குத் தனு மாயை தான் என்ப அஞ்ஞானத் தோர்க்குக் கன்மம் தனு ஆகும் மெய் ஞானத் தோர்க்குச் சிவ தனு மேவுமே.
மலம் என்று உடம்பை மதியாத ஊமர் தலம் என்று வேறு தரித்தமை கண்டீர் நலம் என்று இதனையே நாடி இருக்கில் பலம் உள்ள காயத்தில் பற்றும் இவ் அண்டத்தே.
நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள் மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும் மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.