பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தோன்றியது தொம் பதம் தற் பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இம் மூன்றோடு எய்தினோன் ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.
போதம் தனை உன்னிப் பூதாதி பேதமும் ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு பேதமும் நாத அந்தப் பெற்றியில் கைவிட்டு வேதம் சொல் தொம் பதம் ஆகும் தன் மெய்மையே.
தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும் நிற்ப தசியத்துள் நேர் இழையாள் பதம் சொல் பதத்தாலும் தொடர ஒண்ணாச் சிவன் கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.
அணுவும் பரமும் அசி பதத் தேய்ந்து கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால் இணை அறு பால் தேன் அமுது என இன்பத் துணை அது வாய் உரை அற்றிடத் தோன்றுமே.
தொம் பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும் அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம் செம் பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே.
ஐம்பது அறியா தவரும் அவர் சிலர் உம்பனை நாடி உரை முப் பதத்து இடைச் செம்பரம் ஆகிய வாசி செலுத்திடத் தம் பர யோகமாய்த் தானவன் ஆகுமே.
நந்தி அறிவும் நழுவில் அதீதம் ஆம் இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும் நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் நந்தி நனவாதி மூட்டும் அனாதியே.
பர துரியத்து நனவு படி உண்ட விரிவில் கனவும் இதன் உப சாந்தத்து உரிய சுழுனையும் ஓவும் சிவன் பால் அரிய துரியம் அசி பதம் ஆமே.