பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு அருவினை ஆவது கண்டு அகன்றபின் புரிவன கன்மக் கயத்துள் புகுமே.
மாயை மறைக்க மறைந்த மறைப் பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறைய வல்லார் கட்குக் காயமும் இல்லை கருத்து இல்லை தானே.
மோழை அடைந்து முழை திறந்து உள் புக்குக் கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில் ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து தாழ அடைப்பது தன் வலி ஆமே.
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆம் இடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆம் இடம் ஆரும் அறிந்தபின் ஆசூசம் ஆளிடம் ஆசூசம் ஆமே.
ஆசூசம் இல்லை அரு நியமத் தருக்கு ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப் பவர்க்கு ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப் போர்க்கு ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.
வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச் சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழி பட்டவர்க்கு அன்றிக் காண ஒண்ணாதே.
தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் கட்குத் தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே.
தூயது வாளாக வைத்தது தூ நெறி தூயது வாளாக நாதன் திரு நாமம் தூயது வாளாக அட்டமா சித்தியும் தூயது வாளாகத் துய் அடிச் சொல்லே.
பொருள் அதுவாய் நின்ற புண்ணியன் எந்தை அருள் அது போற்றும் அடியவர் அன்றிச் சுருள் அதுவாய் நின்ற துன்பச் சுழியின் மருள் அதுவாச் சிந்தை மயங்குகின்றாரே.
வினை ஆம் அசத்து விளைவது உணரார் வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார் வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவு அறியாரே.