பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஒளியை அறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக உடன் இருந்தானே
புகல் எளிது ஆகும் புவனங்கள் எட்டும் அகல் ஒளிதாய் இருள் ஆசு அற வீசும் பகல் ஒளி செய்தது அத் தாமரை யிலே இகல் ஒளி செய்து எம்பிரான் இருந்தானே.
விளங்கு ஒளி அங்கி விரிகதிர் சோமன் துளங்கு ஒளி பெற்றன சோதி அருள வளங்கு ஒளி பெற்றதே பேர் ஒளி வேறு களங்கு ஒளி செய்து கலந்து நின்றானே.
இளங்கு ஒளி ஈசன் பிறப்பு ஒன்றும் இல்லி துளங்கு ஒளி ஞாயிறும் திங்களும் கண்கள் வளங்கு ஒளி அங்கியும் அற்றைக் கண் நெற்றி விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே.
மேல் ஒளி கீழ் அதன் மேவிய மாருதம் பால் ஒளி அங்கி பரந்து ஒளி ஆகாசம் நீர் ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும் மேல் ஒளி ஐந்தும் ஒருங்கு ஒளி ஆமே.
மின்னிய தூ ஒளி மே தக்க செவ் ஒளி பன்னிய ஞானம் பரந்த பரத்து ஒளி துன்னிய வாறு ஒளி தூய் மொழி நாள் தொறும் உன்னிய வாறு ஒளி ஒத்தது தானே.
விளங்கு ஒளி மின் ஒளி ஆகிக் கரந்து துளங்கு ஒளி ஈசனைச் சொல்லும் எப்போதும் உளங்கு ஒளி ஊன் இடை நின்று உயிர்க்கின்ற வளங்கு ஒளி எங்கும் மருவி நின்றானே.
விளங்கு ஒளி அவ் ஒளி அவ் இருள் மன்னும் துளங்கு ஒளியான் தொழுவார்க்கும் ஒளியான் அளங்கு ஒளி ஆர் அமுதாக நம் சாரும் களங்கு ஒளி ஈசன் கருத்து அது தானே.
இலங்கியது எவ் ஒளி அவ் ஒளி ஈசன் துலங்கு ஒளி போல்வது தூங்கு அருள் சத்தி விளங்கு ஒளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கு ஒளி உள்ளே ஒருங்கு கின்றானே.
உளங்கு ஒளி ஆவது என் உள்நின்ற சீவன் வளங்கு ஒளியாய் நின்ற மா மணிச்சோதி விளங்கு ஒளியாய் மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கு ஒளி ஆயத்து உளாகி நின்றானே.
விளங்கு ஒளியாய் நின்ற விகிர்தன் இருந்த துளங்கு ஒளி பாசத்துள் தூங்கு இருள் சேராக் களங்கு இருள் நட்டமே கண் நுதல் ஆட விளங்கு ஒளி உன் மனத்து ஒன்றி நின்றானே.
போது கருங் குழல் போனவர் தூது இடை ஆதி பரத்தை அமரர் பிரானொடும் சோதியும் அண்டத்து அப்பால் உற்ற தூ ஒளி நீதியின் அல் இருள் நீக்கிய வாறே.
உண்டு இல்லை என்னும் உலகத்து இயல்வது பண்டு இல்லை என்னும் பரம் கதி உண்டு கொல் கண்டு இல்லை மானுடர் கண்ட கருத்து உறில் விண்டு இல்லை உள்ளே விளக்கு ஒளி ஆமே.
சுடர் உற ஓங்கிய ஒள் ஒளி ஆங்கே படர் உறு காட்சிப் பகலவன் ஈசன் அடர் உறு மாயையின் ஆர் இருள் வீசில் உடல் உறு ஞானத் துறவியன் ஆமே.
ஒளி பவளத் திருமேனி வெண்ணீற்றன் அளி பவளச் செம்பொன் ஆதிப் பிரானும் களி பவளத்தினன் கார் இருள் நீங்கி ஒளி பவளத்து என்னோடு ஈசன் நின்றானே.
ஈசன் நின்றான் இமையோர்கள் நின்றார் நின்ற தேசம் ஒன்று இன்றித் தகைத்து இழைக்கின்றார் பாசம் ஒன்று ஆகப் பழவினைப் பற்று அற வாசம் ஒன்று ஆம் மலர் போன்றது தானே.
தானே இருக்கும் அவற்றில் தலைவனும் தானே இருக்கும் அவன் என நண்ணிடும் வானாய் இருக்கும் இம்மா இரு ஞாலத்துப் பானாய் இருக்கப் பரவலும் ஆமே.