பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூதல மேருப் புறத்து ஆன தெக்கணம் ஓதும் இடை பிங்கலை ஒண் சுழுனை ஆம் பாதி மதியோன் பயில் திரு அம்பலம் ஏதம் இல் பூதாண்டத்து எல்லையின் ஈறே.
அண்டங்கள் ஓர் ஏழும் அம் பொன் பதி ஆகப் பண்டை ஆகாசங்கள் ஐந்தும் பதி ஆகத் தெண்டினில் சத்தி திரு அம்பலம் ஆகக் கொண்டு பரம் சோதி கூத்து உகந்தானே.
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணம் ஆம் சிரானந்தம் பூரித்துத் தென் திசை சேர்ந்து புரானந்த போகனாய்ப் பூவையும் தானும் நிரானந்தம் ஆகி நிருத்தம் செய்தானே.
ஆதி பரன் ஆட அங் கைக் கனல் ஆட ஓதும் சடை ஆட உன்மத்தம் உற்று ஆடப் பாதி மதி ஆடப் பார் அண்டம் மீது ஆட நாத மோடு ஆடினான் நாத அந்த நட்டமே.
கும்பிட அம்பலத்து ஆடிய கோன் நடம் அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டம் ஆம் செம் பொருளாகும் சிவலோகம் சேர்ந்து உற்றால் உம்பர மோன ஞான அந்தத்தில் உண்மையே.
மேதினி மூ ஏழ் மிகும் அண்டம் ஓர் ஏழு சாதகம் ஆகும் சமயங்கள் நூற்று எட்டு நாதமோடு அந்த நடானந்த நாற்பதப் பாதியோடு ஆடிப் பரன் இரு பாதமே.
இடை பிங்கலை இம வானோடு இலங்கை நடு நின்ற மேரு நடு ஆம் சுழுனை கடவும் திலை வனம் கை கண்ட மூலம் படர் ஒன்றி என்னும் பரம் ஆம் பரமே.
ஈறு ஆன கன்னி குமரியே காவிரி வேறா நவ தீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுள் பேறு ஆன வேத ஆகமமே பிறத்தலான் மாறாத தென் திசை வையகம் சுத்தமே.
நாதத்தினில் ஆடி நார் பதத்தே ஆடி வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீது ஆடி போதத்தில் ஆடிப் புவனம் முழுதும் ஆடும் தீது அற்ற தேவாதி தேவர் பிரானே.
தேவரோடு ஆடித் திரு அம்பலத்து ஆடி மூவரோடு ஆடி முனி சனத்தோடு ஆடிப் பாவின் உள் ஆடிப் பரா சத்தியில் ஆடிக் கோவின் உள் ஆடிடும் கூத்த பிரானே.
ஆறு முகத்தில் அதிபதி நான் என்றும் கூறு சமயக் குருபரன் நான் என்றும் தேறினர் தெற்குத் திரு அம்பலத்து உள்ளே வேறு இன்றி அண்ணல் விளங்கி நின்றானே.
அம்பலம் ஆடு அரங்கு ஆக அதன் மீதே எம் பரன் ஆடும் இரு தாளின் ஈர் ஒளி உம் பரம் ஆம் ஐந்து நாதத்து ரேகையுள் தம் பதம் ஆய் நின்று தான் வந்து அருளுமே.
ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும் பாடிய பாட்டும் பல ஆன நட்டமும் கூடிய கோலம் குருபரன் கொண்டு ஆடத் தேடி உளே கண்டு தீர்ந்து அற்ற வாறே.
இருதயம் தன்னில் எழுந்த பிராணன் கர சரண் ஆதி கலக்கும் படியே அர தனம் மன்றினின் மாணிக்கக் கூத்தன் குரவனாய் எங்கணும் கூத்து உகந்தானே.