பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பிரமனும் மாலும் பிரானே நான் என்னப் பிரமன் மால் தங்கள் தம் பேதைமை யாலே பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க அரன் அடி தேடி அரற்று கின்றாரே.
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண்டு இலர் மீண்டும் பார் மிசைக் கூடி அடிகண் டு இலேன் என்று அச்சுதன் சொல்ல முடி கண்டேன் என்று அயன் பொய்மொழிந் தானே.
ஆம் ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும் தாம் ஏழ் உலகில் தழல் பிழம்பாய் நிற்கும் வான் ஏழ் உலகு உறும் மா மணி கண்டனை யானே அறிந்தேன் அவன் ஆண்மை யாலே.
ஊனாய் உயிராய் உணர் அங்கியாய் முன்னம் சேணாய் வான் ஓங்கித் திரு உருவாய் அண்டத் தாணுவும் ஞாயிறும் தண் மதியும் கடந்து தாண் முழுது அண்டமும் ஆகி நின்றானே.
நின்றான் நில முழுது அண்டத்துள் நீளியன் அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது சென்றார் இருவர் திருமுடி மேல் செல நன்று ஆம் கழல் அடி நாட ஒண்ணாதே.
சேவடி ஏத்தும் செறிவுடை வானவர் மூவடி தா என்றானும் முனிவரும் பாவடியாலே பதம் செய் பிரமனும் தாவடி இட்டுத் தலைப் பெய்தும் மாறே.
தானக் கமலத்து இருந்த சதுமுகன் தானக் கரும் கடல் ஊழித் தலைவனும் ஊனத்தின் உள்ளே உயிர் போல் உணர்கின்ற தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே.
ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர் மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந் நெறி முன் கண்டு ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும் கோலிங்கு அமைஞ்சருள் கூடலும் ஆமே.
வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள் ஆள் கொடுத்து எம்போல் அரனை அறிகிலர் ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத் தாள் கொடுத்தான் அடி சார கிலாரே.
ஊழி வலம் செய்து அங்கு ஓரும் ஒருவற்கு வாழி சது முகன் வந்து வெளிப்படும் வீழித் தலைநீர் விதித்தது தா என ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே.