பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / மறைத்தல்
வ.எண் பாடல்
1

உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உரு அறியாதே.

2

இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பம் செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பில் கொளுவி இசைந்துறு தோற்றசை
முன்பில் கொளுவி முடி குவ தாமே.

3

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்து உடன் கூடி
இறையவன் செய்த இரும் பொறியாக்கை
மறையவன் வைத்த பரிசு அறியாதே.

4

காண்கின்ற கண் ஒளி காதல் செய்து ஈசனை
ஆண் பெண் அலி உருவாய் நின்ற ஆதியை
ஊண் படு நா உடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண் படு பொய்கைச் செயல் அணையாரே

5

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகை செய்யும் ஆதிப் பிரானும்
சுருளும் சுடர் உறு தூவெண் சுடரும்
இருளும் அற நின்ற இருட்டு அறையாமே.

6

அரைக்கின்ற அருள் தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடு ஒன்று ஒவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகம் தானாய்க்
கரக்கின்றவை செய்த காண் தகையானே.

7

ஒளித்து வைத்தேன் உள் உற உணர்ந்து ஈசனை
வெளிப்பட்டு நின்று அருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடும் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட்டு இறைஞ்சினும் வேட்சியும் ஆமே.

8

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேல் இருந்து இன்புற நாடி
வருங்கரை ஓரா வகையினில் கங்கை
அருங் கரை பேணில் அழுக்கு அறலாமே.

9

மண் ஒன்று தான் பல நல் கலம் ஆயிடும்
உள் நின்ற யோனி கட்கு எல்லாம் ஒருவனே
கண் ஒன்று தான் பல காணும் தனைக் காணா
அண்ணலும் இவ் வண்ணம் ஆகி நின்றானே.