பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / தாரணை
வ.எண் பாடல்
1

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண்டு ஊடே வெளி உறத்தான் நோக்கிக்
காணாக் கண் கேளாச் செவி என்று இருப்பார்க்கு
வாழ்நாள் அடைக்கும் வழி அது ஆமே.

2

மலையார் சிரத்து இடை வான் நீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி ஊடே
சிலையார் பொதுவில் திரு நடம் ஆடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண்டேனே.

3

மேலை நிலத்தினாள் வேதகப் பெண் பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பரா நந்தி ஆணையே.

4

கடை வாசலைக் கட்டிக் காலை எழுப்பி
இடை வாசல் நோக்கி இனிது உள் இருத்தி
மடை வாயில் கொக்குப் போல் வந்தித்து இருப்பார்க்கு
உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே.

5

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிர் அது காலின் நெருக்கம்
கலந்த உயிர் அது கால் அது கட்டில்
கலந்த உயிர் உடல் காலமும் நிற்குமே.

6

வாய் திறவாதார் மனத்தில் ஓர் மாடு உண்டு
வாய் திறப்பாரே வளி இட்டுப் பாய்ச்சுவர்
வாய் திறவாதார் மதி இட்டு மூட்டுவர்
கோய் திறவா விடில் கோழையும் ஆமே.

7

வாழலும் ஆம் பலகாலும் மனத்து இடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சு உறில்
ஏழு சாலேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியது ஓர் பள்ளி அறையே.

8

நிரம்பிய ஈர் ஐந்தில் ஐந்து இவை போனால்
இரங்கி விழித்து இருந்து என் செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழி செய்குவார்க்குக்
குரங்கினைக் கொட்டை பொதியலும் ஆமே.

9

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க்கு என்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறு கதி பேசிடில்
என்ன மாயம் இடி கரை நிற்குமே.

10

அரித்த உடலை ஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்த ஐம்பூதம் சத்தாதியில் போந்து
தெரித்தமன் ஆதி சத்தாதியில் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.