பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ககர் ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை அகர் ஆதி ஓர் அரத்தமே போலும் சகர் ஆதி ஓர் நான்கும் தான் சுத்த வெண்மை ககர் ஆதி மூவித்தை காமிய முத்தியே.
ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத் தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக்கேள் வாரில் திரிகோணம் மனம் இன்ப முத்தியும் தேரில் அறியும் சிவ காயம் தானே.
ஏக பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே ஆகம் பரா வித்தை ஆம் முத்தி சித்தியே ஏகம் பரா சத்தி ஆகச் சிவ குரு யோகம் பரா சத்தி உண்மை எட்டு ஆமே.
எட்டு ஆகிய சத்தி எட்டு ஆகும் யோகத்துக் கட்டு ஆகும் நாதாந்தத்து எட்டும் கலப்பித்த தொட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்தது கிட்டாது ஒழிந்தது கீழ் ஆன மூடர்க்கே.
ஏதும் பலம் ஆம் இயந்திராசன் அடி ஓதிக் குருவின் உபதேசம் கொண்டு நீ தங்கும் அங்க நியாசம்தனைப் பண்ணிச் சாதம் கெடச் செம்பில் சட்கோணம் தான் இடே.
சட் கோணம் தன்னில் ஸ்ரீம் ஹிரீம் தான் இட்டு அக் கோணம் மாறின் தலையில் ரீங்காரம் இட்டு எக்கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின் மிக்கு ஈர் எட்டு அக்கரமம் முதன் மேல் இடே.
இட்ட இதழ்கள் இடை அந்தரத் திலே அட்ட ஹவ் விட்டத்தின் மேலே உவ் இட்டுக் கிட்ட இதழ்களின் மேலே கிரோம் சிரோம் இட்டு வாமத்து ஆங்கு கிரோம் என்று மேவிடே.
மேவிய சக்கரம் மீது வலத்திலே கோவை அடையவே குரோம் சிரோம் என்று இட்டுத் தாவுஇல் ரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து பூவைப் புவனா பதியைப் பின் பூசியே.
பூசிக்கும் போது புவனா பதி தன்னை ஆசற்று அகத்தினில் ஆவா கனம் பண்ணிப் பேசிய பிராணப் பிஅதிட்டை அது செய்து தேசு உற்றிடவே தியானம் அது செய்யே.
செய்ய திருமேனி செம்பட்டு உடைத் தானும் கையில் படை அங்குச பாசத்தோடு அபய மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி துய்ய முடியும் அவ யவத்தில் தோற்றமே.
தோல் போர்வை நீக்கித் துதித்து அடைவில் பூசித்துப் பால் போனகம் மந்திரத்தால் பயின்று ஏத்தி நால் பால நாரதா யா சுவாகா என்று சீர்ப் பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே.
சேவிப்பதன் முன்னே தேவியையும் உத் வாகனத்தால் பாவித்து இதய கமலம் பதிவித்து அங்கு யாவருக்கும் எட்டா இயந்திர ராசனை நீ வைத்துச் சேமி நினைந்தது தருமே.